/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் போலீசாருக்கு இடமாறுதலில் முன்னுரிமை: டி.ஜி.பி.,
/
பெண் போலீசாருக்கு இடமாறுதலில் முன்னுரிமை: டி.ஜி.பி.,
பெண் போலீசாருக்கு இடமாறுதலில் முன்னுரிமை: டி.ஜி.பி.,
பெண் போலீசாருக்கு இடமாறுதலில் முன்னுரிமை: டி.ஜி.பி.,
ADDED : செப் 01, 2024 02:13 AM

கோவை;சொந்த ஊர்களுக்கு பணியிட மாற்றம் கேட்கும் கர்ப்பிணி மற்றும் தாய்மார்களுக்கு, உடனடியாக இடம் மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால், நேற்று முன்தினம் கோவை வந்தார். இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மாலையில் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில், கோவை சரகத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள், ரவுடிகளின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில் குமார், கோவை சரக டி.ஐ.ஜி., சரவண சுந்தர், கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன், நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஷா, திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா, ஈரோடு மாவட்ட எஸ்.பி., ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்த போலீசாருக்கான குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, மனுக்களை பெற்றார்; 643 மனுக்கள் பெறப்பட்டன.
டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பேசுகையில், ''வேறு சரகத்திற்கு மாற்றக்கோரி (இன்டர் ஜோன் டிரான்ஸ்பர்) பல மனுக்கள் வருகின்றன. இதற்கு முன் மனு அளித்தவர்களுக்கும், தற்போது மனு அளித்தவர்களுக்கும் ரசீது வழங்கப்படும்.
அதில், காத்திருப்பு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் பணியிட மாறுதல் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மனு அளித்து ஓராண்டு ஆனவர்களுக்கு, மாறுதல் அளிக்க பொங்கலுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கர்ப்ப காலம் முடிந்தும், குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என பணியிட மாற்றம் கேட்கும் தாய்மார்களுக்கு, உடனடியாக சொந்த ஊருக்கு மாற்றம் வழங்க, முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு அவர்கள் கேட்கும் இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். அவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்,'' என்றார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ஐ.ஜி., செந்தில் குமார், டி.ஐ.ஜி., சரவண சுந்தர், கோவை எஸ்.பி., கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள், போலீசார் பங்கேற்றனர்.