/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வெர்மிவாஷ்' தயாரிப்புக்கு செயல்முறை விளக்கம்
/
'வெர்மிவாஷ்' தயாரிப்புக்கு செயல்முறை விளக்கம்
ADDED : மே 28, 2024 11:32 PM
பொள்ளாச்சி;ஆழியாறு பகுதியில் வேளாண் பல்கலை மாணவியர், செறிவூட்டப்பட்ட மண்புழு கழிவு நீர் பயன்பாடு குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊரக வேளாண் அனுபவ பயிற்சிக்காக, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை நான்காம் ஆண்டு மாணவியர், ஆழியாறு பகுதியில் முகாமிட்டுள்ளனர். ஒவ்வொரு விவசாயிகளிடமும் பயிர் மற்றும் காய்கறி சாகுபடி அனுபவங்களை கேட்டறிவதுடன், செயல்முறை விளக்கம் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, செறிவூட்டப்பட்ட மண்புழு கழிவுநீர் நீர் (வெர்மிவாஷ்) தயாரிப்பு முறை மற்றும் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
மாணவியர் கூறுகையில், 'வெர்மிவாஷ் என்பது மண்புழு வளர்ப்பு படுக்கை வழியாக சேமிக்கப்படும் பழுப்பு நிற நீராகும். இதில், பல நுண்ணுாட்ட சத்துகள், ஹார்மோன்கள், புரதங்கள் உள்ளன. இக்கலவை பல தாவர நோய்களை தடுக்கவும், தாவரங்களில் ஒளிச்சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
இக்கலவையை தயாரிக்க, 50 மி.லி., வெர்மிவாஷை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்கி இலைவழி தெளிப்பு முறைப்படி செலுத்த வேண்டும். வெர்மிவாஷ் தேவைப்படும் விவசாயிகள் தமிழ்நாடு வேளாண் பல்கலையை அணுகலாம்,' என்றனர்.
உடுமலை, மே 29-
பரவலாக பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி, பசுந்தீவன தேவைக்கான தீவனப்பயிர்கள் சாகுபடிக்கு கால்நடை வளர்ப்போர் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்; மானியத்திட்டத்தில், விதை, கரணை வழங்கி, கால்நடைத்துறை உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதியில், பால் உற்பத்திக்காக, கறவை மாடுகள் வளர்ப்பு அதிகமாக உள்ளது. கிராமங்களில், மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் மாயமாகியுள்ளது. எனவே, மாடுகளுக்கு, விளைநிலங்களிலேயே பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து, வழங்குகின்றனர்.
கடந்தாண்டு நவ., மாதம் முதல் இந்தாண்டு ஏப்., மாதம் வரை, உடுமலை வட்டாரத்தில் மழை பெய்யாமல் வறட்சி ஏற்பட்டது. இதனால், பசுந்தீவன பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல், முற்றிலுமாக கருகியது; உலர் தீவனத்தை இருப்பு வைத்து பயன்படுத்தினர்.
இந்நிலையில், தற்போது உடுமலை வட்டாரத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதையடுத்து, பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பசுந்தீவன உற்பத்திக்கான பணிகளை கால்நடை வளர்ப்போர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆனால், இதற்கு தேவையான விதை, கரணை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை வேளாண் பல்கலை., யால், பல்வேறு ரக தீவனப்பயிர்கள் பரிந்துரைக்கப்படுகிறது.
கலப்பின புல்வகைத்தீவனம் வளர்ப்பில் ஈடுபட்டால், ஆண்டு முழுவதும் பசுந்தீவன தட்டுப்பாடு இருக்காது. இத்தகைய தீவனப்புல் வகைகளுக்கான விதைகள், கரணைகள் கால்நடை வளர்ப்போருக்கு போதுமான அளவு கிடைப்பதில்லை.
இதனால், கால்நடை வளர்ப்போர் தங்களுக்குள், கரணைகளை மாற்றிக்கொண்டு, தீவனப்புல் வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். இருப்பினும், போதியளவு விதைகள், கரணைகள் கிடைக்காமல், பசுந்தீவன உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, கால்நடைத்துறை சார்பில், பயறு வகை, தீவன வகை, புல் வகை தீவனப்பயிர்களுக்கான விதைகளை மானியத்தில் வழங்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.