/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உக்கடம் மேம்பாலத்தில் மழை நீர் சேகரிக்க திட்டம்! ஜூன் 30க்குள் மேம்பாலம் பணிகளை முடிக்க இலக்கு
/
உக்கடம் மேம்பாலத்தில் மழை நீர் சேகரிக்க திட்டம்! ஜூன் 30க்குள் மேம்பாலம் பணிகளை முடிக்க இலக்கு
உக்கடம் மேம்பாலத்தில் மழை நீர் சேகரிக்க திட்டம்! ஜூன் 30க்குள் மேம்பாலம் பணிகளை முடிக்க இலக்கு
உக்கடம் மேம்பாலத்தில் மழை நீர் சேகரிக்க திட்டம்! ஜூன் 30க்குள் மேம்பாலம் பணிகளை முடிக்க இலக்கு
ADDED : ஏப் 30, 2024 01:40 AM

- நமது நிருபர் -
உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிகளை, ஜூன் 30க்குள் முடிக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. மேம்பாலத்தில் வடியும் மழை நீரை சேகரிக்க, கீழ் பகுதியில் கிணறு போன்ற ரிங் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ரூ.500 கோடி மதிப்பீட்டில், மாநில நெடுஞ்சாலைத்துறையால் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டப்படுகிறது.
அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட இவ்வேலை, வாகன போக்குவரத்துக்கு இடையே மேற்கொள்வதால், மிகவும் தாமதமாகி வருகிறது.
மார்ச் இறுதிக்குள் வேலையை முழுமையாக முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் ஏறுதளம், இறங்கு தளங்கள் அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது.
ஆத்துப்பாலம் சந்திப்பில் பொள்ளாச்சி ரோட்டில் இறங்கு தளம் அமைக்கும் பணியை, மே இறுதிக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி ரோட்டில் வருவோர், பாலத்தை பயன்படுத்த பெட்ரோல் பங்க் அருகே ஏறுதளம் அமைக்கப்பட்டு விட்டது. இனி தார் ரோடு போட வேண்டியிருக்கிறது.
இறங்கு தளத்தை ஒட்டி, குறிச்சி பிரிவு வரை மையத்தடுப்பு அமைக்கப்படுகிறது. ஆங்காங்கே ரோட்டின் குறுக்கே, மின் கம்பங்கள் இடையூறாக இருக்கின்றன; அவற்றை இடம் மாற்றி நட வேண்டியுள்ளது.
ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து, மேம்பாலத்தில் வாகனங்களில் வருவோர் சுங்கம் செல்வதற்கு உக்கடம் பஸ் ஸ்டாண்ட் முன் வலதுபுறம் திரும்பி, அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், வாலாங்குளம் பைபாஸில் இறங்கும் வகையில், ஓடுதளம் அமைக்கப்படுகிறது.
இதற்காக, பணிமனையில் உள்ள ஒரு கட்டடம் இடிக்கப்பட்டு விட்டது; மூன்று தளங்களுடன் கூடிய இன்னொரு கட்டடத்தை, இடிக்க வேண்டியிருக்கிறது.
அப்பகுதியில் செல்லும் மின் புதை வடத்தை, இடம் மாற்றி பதிக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக, மின்வாரியத்தினருடன் நெடுஞ்சாலைத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். ஆத்துப்பாலத்தில் உள்ள பழைய பாலத்தில் உள்ள நடைபாதை மற்றும் கைப்பிடிச்சுவர் இடிக்கும் பணி துவங்கியுள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பிரசன்ன வெங்கடேஷ் கூறியதாவது:
பொள்ளாச்சி ரோட்டில் ஏறு தளம், இறங்கு தளம் அமைக்கும் பணி மே மாதம் முடியும். வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. ஜூன் 30க்குள் மேம்பால வேலையை முடிக்க திட்டமிட்டுள்ளோம். வாலாங்குளம் ரோட்டில், இறங்கு தளம் அமைக்கும் பணி மட்டும் தாமதமாகும்.
போக்குவரத்து கழக பணிமனை கட்டடத்தை இடித்து விட்டு, தற்காலிகமாக மாற்று கட்டடம் கட்ட வேண்டியுள்ளது. மின் புதை வடத்தை வேறிடத்தில் மாற்றி பதிக்க வேண்டும்; மின்வாரியத்தினருடன் பேசி வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

