/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவிலை மருதமலை கோவிலுடன் இணைக்க திட்டம்
/
தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவிலை மருதமலை கோவிலுடன் இணைக்க திட்டம்
தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவிலை மருதமலை கோவிலுடன் இணைக்க திட்டம்
தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவிலை மருதமலை கோவிலுடன் இணைக்க திட்டம்
ADDED : ஜூலை 30, 2024 10:49 PM
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பார்க்கிங் வசதி பற்றாக்குறையாக உள்ளதால், பாரதியார் பல்கலை.,யில் பார்க்கிங் வசதி ஏற்படுத்துவதற்காக, தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவிலை, மருதமலை கோவிலுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில், தைப்பூச திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி ஆகிய திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதோடு, திருவிழா நாட்கள், புத்தாண்டு தினம், மூகூர்த்த தினம், செவ்வாய் மற்றும் வார விடுமுறை நாட்களில், ஏராளாமான பக்தர்கள் வருகின்றனர். மலைமேல் உள்ள பார்க்கிங்கில், 40 கார்கள், 100 பைக்குகள் வரை மட்டுமே நிறுத்த இடவசதி உள்ளது. இதனால், பக்தர்கள் அதிகமாக வரும் நாட்களில், பார்க்கிங் வசதி இல்லாமல், அடிவாரத்தில், தங்களது சொந்த வாகனங்களில் வரும் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால், மருதமலை அடிவாரத்தில் தனியாக பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனையடுத்து, மருதமலை அடிவாரத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பார்க்கிங் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு நீர்வழித்தடம் உள்ளதால், அங்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து, சட்டக்கல்லூரி அருகில் உள்ள பாரதியார் பல்கலைக்கு சொந்தமான இடத்தில் பார்க்கிங் அமைக்க திட்டமிடப்பட்டது. அந்த இடத்திற்கு, 68 கோடி ரூபாய் பாரதியார் பல்கலை.,க்கு வழங்கப்பட்ட வேண்டும் என்ற நிலை உருவானது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், குத்தகை அடிப்படையில், பாரதியார் பல்கலையின் உறுப்பு கல்லூரியாக இருந்த தொண்டாமுத்தூர் அரசு கல்லூரி செயல்பட்டு வருவதால், இந்த இடத்தை, பாரதியார் பல்கலை.,க்கும், பாரதியார் பல்கலை.,யில், பார்க்கிங் வசதிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை, மருதமலை கோவிலுக்கும், இடப்பறிமாற்றம் முறையில் பெற, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனரிடம் ஒப்புதலுக்கு கடந்த, மார்ச் மாதம் அனுப்பப்பட்டது. அதன்பின், தற்போது வரை, அப்பணி இழுபறியில் உள்ளது.
இதுகுறித்து மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனர் செந்தில்குமாரிடம் கேட்டபோது,பாரதியார் பல்கலை., இடத்திற்கு, 68 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். அதனால், தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் இடம் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவிலை, மருதமலை கோவிலின் உப கோவிலாக இணைக்க அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது,என்றார்.