/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
த.வெ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
த.வெ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 24, 2025 12:47 AM

போத்தனூர்; கோவை, வெள்ளலூரில் குப்பை கிடங்கு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கோரி, தமிழக வெற்றிக்கழகம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வெள்ளலூர் பஸ் திருப்பம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ் தலைமை வகித்து பேசுகையில், குப்பை கிடங்கால், இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பிரச்னைக்கு தீர்வு காணாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். எங்கள் கட்சி கொடி கட்ட, போலீசார் அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில் ஆளும் கட்சியினர் எவ்வித அனுமதியுமின்றி கொடி கட்டுகின்றனர். மக்கள் பிரச்னையை தீர்க்க நாங்கள் போராடுகிறோம் என்றார்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷமிட்டனர். 150 பெண்கள் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர் விக்னேஷ் பேட்டி:
குப்பை கிடங்கு பிரச்னை 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இதுவரை ஆண்ட எந்த கட்சியினரும் இதற்கு முடிவு காணவில்லை. இக்குப்பை கழிவால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பலவித தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னரே மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
அரசு இக்குப்பை கிடங்கை முழுமையாக அகற்றவேண்டும். நடவடிக்கை இல்லையெனில் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் ஊர்வலமாக சென்று மனு கொடுப்போம். தலைவர் விஜயை ஏப்., மாதம் இங்கு அழைத்து வந்து பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

