/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சரியான அளவில் சீருடை வழங்குங்க! ஆசிரியர்கள் வலியுறுத்தல்
/
சரியான அளவில் சீருடை வழங்குங்க! ஆசிரியர்கள் வலியுறுத்தல்
சரியான அளவில் சீருடை வழங்குங்க! ஆசிரியர்கள் வலியுறுத்தல்
சரியான அளவில் சீருடை வழங்குங்க! ஆசிரியர்கள் வலியுறுத்தல்
ADDED : மே 01, 2024 10:59 PM
உடுமலை : அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் சீருடைகள், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் சரியான அளவுகளில் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப்பள்ளிகள் உள்ளன. இங்கு லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். கல்வியாண்டு தோறும், மாணவர்களுக்கு இலவச சீருடைகள் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.
ஒரு கல்வியாண்டுக்கு, இரண்டு வீதம் வழங்கப்பட்டது. சீருடைகளின் தரம் குறைவாக இருந்ததால், மாணவர்கள் அதிக நாட்கள் பயன்படுத்த முடியாமல், அடுத்த சீருடை வரும் வரை, வேறுவழியின்றி கிழிந்த ஆடைகளை அணிந்து வந்தனர்.
மாணவர்களின் இந்நிலையை மாற்ற, கடந்த 2011ம் ஆண்டுக்கு பின்பு, ஒரு கல்வியாண்டுக்கு நான்கு 'செட்'கள் வழங்கப்பட்டன.
ஆனாலும், பல பள்ளிகளில், மாணவர்கள் இந்த சீருடைகளை பயன்படுத்த முடியாத நிலை தான் தொடர்கிறது. சீருடைகள், முழுமையாக வடிவமைத்து வழங்கப்படுகிறது.
அதுவே அவற்றை பயன்படுத்த முடியாமல் போவதற்கான காரணமாகவும் உள்ளது. மாணவர்களின் உடல் அளவுக்கு ஏற்ற வகையில், சீருடைகள் இருப்பதில்லை, கை கால்களை நுழைக்க முடியாதபடி சிறியதாகவும், சிறிய உடல்வாகுள்ள குழந்தைகளுக்கு மிகவும் பெரியதான அளவிலும் உள்ளது.
பெரிதாக உள்ள சீருடைகளை, ஆசிரியர்கள் சரிபார்த்து குழந்தைகளின் உடல் அளவுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து வழங்குகின்றனர்.
ஆனால், சிறியதாக அமைந்துவிடும் சீருடைகளை, மாற்றவும் முடியாமல், வீணாகிறது.இதனால், பெற்றோர், மீண்டும் புதிய சீருடைகளை வாங்க வேண்டியுள்ளது.
ஒவ்வொரு கல்வியாண்டிலும், மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் சீருடைகள் சரியான அளவுகளில் வழங்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் புதிய கல்வியாண்டில், குறிப்பிட்ட பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவினர் வாயிலாக, சீருடை வடிவமைத்து வழங்கும் திட்டத்தை, சோதனை முறையில் செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது.
அனைத்து பள்ளிகளிலும், இம்முறையில் அந்தந்த பகுதிகளில் உள்ள தையல் பணியாளர்கள் வாயிலாக, மாணவர்களை நேரடியாக அளவு எடுத்து சீருடை வடிவமைப்பதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
ஒட்டுமொத்தமாக, அனைத்து மாணவர்களுக்கும், சராசரியான ஒரு அளவில், சீருடைகளை வடிவமைத்து வழங்குவதால் தான் இப்பிரச்னை ஏற்படுகிறது.
இதற்கு மாற்றாக, ஒவ்வொரு வட்டாரத்திலும், அங்குள்ள தையல் கடைகளுக்கு அரசின் சார்பில் குறிப்பிட்ட தொகையை வழங்கி, மாணவர்களுக்கான அளவுகளில் சீருடைகளை வடிவமைத்து வழங்கலாம்.
அதற்கான நடவடிக்கைகளையும், குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து அரசு செயல்படுத்த உள்ளது. விரைவில் அனைத்து மாணவர்களுக்கும், சீரான வடிவமைப்புடன் சீருடை வழங்கப்படும் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, கூறினர்.

