/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பீளமேட்டில் குப்பை மாற்று மையம் கட்ட எதிர்ப்பு; பொதுமக்கள் திரண்டு வந்ததால் பணிகள் நிறுத்தம்
/
பீளமேட்டில் குப்பை மாற்று மையம் கட்ட எதிர்ப்பு; பொதுமக்கள் திரண்டு வந்ததால் பணிகள் நிறுத்தம்
பீளமேட்டில் குப்பை மாற்று மையம் கட்ட எதிர்ப்பு; பொதுமக்கள் திரண்டு வந்ததால் பணிகள் நிறுத்தம்
பீளமேட்டில் குப்பை மாற்று மையம் கட்ட எதிர்ப்பு; பொதுமக்கள் திரண்டு வந்ததால் பணிகள் நிறுத்தம்
ADDED : மார் 15, 2025 12:07 AM

கோவை; கோவை, பீளமேடு பகுதியில் விளாங்குறிச்சி ரோட்டில், மயானத்தில் குப்பை மாற்று மையம் கட்டுவதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சி சார்பில், சத்தி ரோடு, பீளமேடு மற்றும் கோவைப்புதுாரில் தலா ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில், மொத்தம், 21 கோடி ரூபாய் செலவில் குப்பை மாற்று நிலையங்கள் கட்டப்பட உள்ளன. இதில், சத்தி ரோட்டில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பழைய மையம் புதுப்பிக்கப்படுகிறது. கோவைப்புதுாரில் பூங்கா வளாகத்தில் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதேபோல், 26வது வார்டு பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் மயானத்தின் ஒரு பகுதியில் குப்பை மாற்று மையம் கட்டுவதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இதுதொடர்பாக, ம.தி.மு.க., கவுன்சிலர் சித்ரா தலைமையில் ம.தி.மு.க.,வினர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை நேரில் சந்தித்து முறையிட்டனர். மக்களின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல், மயானப்பகுதியிலேயே குப்பை மாற்று மையம் கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு, பணியை தடுத்து நிறுத்தினர்.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'இந்துக்கள் மயானத்தை அகற்றி விட்டு, குப்பை மாற்று நிலையம் அமைக்கும் பணி, 15 நாட்களாக நடக்கிறது. சிங்காநல்லுார் எம்.எல்.ஏ., ஜெயராம் தலைமையில் சென்று மாநகராட்சி துணை கமிஷனரை சந்தித்து, இப்பணியை நிறுத்தக் கோரினோம். தொடர்ந்து பணி செய்ததால் தடுத்து நிறுத்தியுள்ளோம். பணியை செய்ய விட மாட்டோமென ஆணித்தரமாக கூறியுள்ளோம். அதிகாரிகள் இரு நாட்கள் அவகாசம் கோரியுள்ளனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படுவோம்' என்றனர்.