/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லாறு பழப்பண்ணைக்கு செல்ல அனுமதி : பொதுமக்கள் வேண்டுகோள்
/
கல்லாறு பழப்பண்ணைக்கு செல்ல அனுமதி : பொதுமக்கள் வேண்டுகோள்
கல்லாறு பழப்பண்ணைக்கு செல்ல அனுமதி : பொதுமக்கள் வேண்டுகோள்
கல்லாறு பழப்பண்ணைக்கு செல்ல அனுமதி : பொதுமக்கள் வேண்டுகோள்
ADDED : மே 13, 2024 11:45 PM

மேட்டுப்பாளையம்:தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான, கல்லாறு பழப்பண்ணையை பார்வையிட, அரசு அனுமதி வழங்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், கல்லாறில் மலைகளுக்கு இடையே, 25 ஏக்கரில், தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, பழப்பண்ணை உள்ளது. இங்கு மங்குஸ்தான், துரியன், லிச்சி, ரம்புட்டான், மலேயன் ஆப்பிள், செர்ரி, பன்னீர் கொய்யா, முட்டை பழம் உள்பட பல்வேறு வகையான பழ மரங்கள், வாசனை திரவிய செடிகள் உள்ளன.
இந்தப் பண்ணை அமைத்து, 125 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இங்கு பல்வேறு வகையான பழ மரங்கள், வாசனை திரவிய செடிகளின் நாற்றுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதே, முதல் பணியாக உள்ளது.
மேலும் மரங்கள் அடர்ந்து இருப்பதாலும், மலைகளுக்கு இடையே இந்த பண்ணை அமைந்திருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர், வெளியூர் மக்கள் ஆகியோர் இந்த பண்ணைக்கு வந்து செல்கின்றனர். இதன் வாயிலாக பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.
இந்த வருவாய் வாயிலாக பண்ணையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த பண்ணை, யானைகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளதால், வேறு இடத்திற்கு மாற்றும்படி, கோர்ட் அறிவித்துள்ளது. இயற்கை சூழ்ந்த பகுதியில்தான், நாற்றுகள் அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும். எனவே, பண்ணை தொடர்ந்து இங்கு இயங்க அனுமதி வழங்க வேண்டும் என, தோட்டக்கலைத்துறை கோரிக்கை வைத்துள்ளது.
கோர்ட் உத்தரவால் பழப்பண்ணை, கடந்த ஒன்றரை மாதமாக மூடப்பட்டுள்ளது. அதனால் பண்ணைக்கு செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தற்போது பண்ணையில் மரம், செடிகளின் நாற்றுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: வெளியூர் செல்ல முடியாத மக்களுக்கு, கல்லாறு பழப்பண்ணை சுற்றுலா தலமாக விளங்கியது. கோடைக்காலம் மற்றும் விடுமுறை நாட்களில், குழந்தைகளை அழைத்துக் கொண்டு, கல்லாறு பண்ணைக்கு சென்று வந்தோம். தற்போது அனுமதி இல்லை என அறிவித்ததால், ஏமாற்றம் அடைந்துள்ளோம். எனவே தமிழக அரசு மற்றும் கோர்ட், கல்லாறு பழப்பண்ணைக்கு பொதுமக்கள் சென்று வர அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

