/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முத்திரைத்தாள் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தவிப்பு
/
முத்திரைத்தாள் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தவிப்பு
ADDED : ஏப் 25, 2024 11:25 PM
அன்னூர்;முத்திரைத்தாள் தட்டுப்பாட்டால், அன்னூர் தாலுகா மக்கள் தவிக்கின்றனர்.
பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு என பல்வேறு தேவைகளுக்கு, 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் முத்திரைத்தாள் அதிகமாக பொது மக்களுக்கு தேவைப்படுகிறது. ஆனால் அன்னூர் தாலுகாவில் கடந்த ஒன்றரை மாதமாக 20 ரூபாய் முத்திரைத்தாள் கிடைப்பதில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'ஒன்றரை மாதமாக அன்னூர் தாலுகாவில் எங்கும் 20 ரூபாய் முத்திரைத்தாள் கிடைப்பதில்லை. ஓரிரு இடத்தில் மட்டும், 50 ரூபாய் முத்திரைத்தாள் கிடைக்கிறது. அதை கூடுதல் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம்.
சில நாட்கள் 50 ரூபாய் முத்திரைத்தாளும் கிடைப்பதில்லை. எனவே நூறு ரூபாய் முத்திரைத்தாளை வாங்கி பயன்படுத்த வேண்டி உள்ளது. இதுகுறித்து முத்திரைத்தாள் விற்பனையாளர்களிடம் கேட்டபோது கருவூலத்திலேயே எங்களுக்கு வழங்குவதில்லை என்று கூறுகின்றனர்.
அரசு 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் முத்திரைத்தாள்களை தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

