/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடாரியால் தாக்கியதில் ரயில்வே ஊழியர் காயம்
/
கோடாரியால் தாக்கியதில் ரயில்வே ஊழியர் காயம்
ADDED : ஜூலை 06, 2024 02:24 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், கோடாரியால் தாக்கியதில் ரயில்வே ஊழியர் படுகாயமடைந்தார். இது குறித்து மேற்கு போலீசார், வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ரயில்வே கூலித்தொழிலாளி ராஜா,35. இவர், பொள்ளாச்சி ரயில்வே காலனியில் கடந்த, இரண்டு வாரமாக தங்கி ரயில்வே தண்டவாளம் இருபுறமும் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார்.
நேற்று முன்தினம், பாலக்காடு செல்வதாக கூறி இருசக்கர வாகனத்தில் சென்றவர், ரயில்வே காலனி நாக கன்னி அம்மன் கோவில் அருகே மயக்கமான நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, ராஜாவிடம் விசாரித்த போது, பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த நாகராஜ்,19, என்பவர், பீடி கேட்ட போது இல்லை என கூறியதால், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது, ராஜா வேலை பார்க்க வைத்திருந்த சிறு கோடாரியை நாகராஜ் பிடுங்கியுள்ளார். அந்த கோடாரியால் தாக்கியதில் ராஜா படுகாயமடைந்தார். இவர், கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நாகராஜை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, நாகராஜ் மீது, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.