ADDED : ஜூன் 08, 2026 06:21 PM

வால்பாறை: வால்பாறையில் கடந்த, 4ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் மழையால் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. ஆறு மற்றும் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், காற்றுடன் கனமழை பெய்ததால், பொள்ளாச்சி ரோடு, சோலையாறுடேம், குரங்குமுடி உள்ளிட்ட வழித்தடங்களில், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மரம் விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, மரங்களை வெட்டி உடனடியாக அகற்றினர்.
இந்நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் மூன்று அடி உயர்ந்து, நேற்று காலை, 39.26 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 603 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது.
நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு (மி.மீ.,) நிலவரம்:
சோலையாறு – 34, பரம்பிக்குளம் – 32, வால்பாறை – 56, மேல்நீராறு – 63, கீழ்நீராறு – 56, காடம்பாறை – 6, சர்க்கார்பதி – 10, துாணக்கடவு – 22, பெருவாரிப்பள்ளம் – 25, மேல்ஆழியாறு – 3, ஆழியாறு – 4, நவமலை – 3, பொள்ளாச்சி – 7 என்ற அளவில் மழை பெய்தது.
