ADDED : ஆக 01, 2024 10:30 PM

வால்பாறை : வால்பாறையில், தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றோர பகுதிகளில் வசிக்கும் வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
சோலையாறு அணை சேடல்டேம் பகுதியில், வீட்டின் மீது மண் சரிந்து விழுந்ததில் பாட்டி, பேத்தி இருவரும் உயிரிழந்தனர். தொடர் மழையால், பல்வேறு இடங்களில் மண் சரிந்தும், மரம் விழுந்தும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், வால்பாறையில் மழையினால் இரண்டு பேர் உயிரிழந்த பகுதியான, சோலையாறுடேம் இடது கரைப்பகுதிக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
கலெக்டர் கூறியதாவது:
சோலையாறுடேம் இடது கரையில் மண்சரிவு ஏற்பட்டு வருவதால், மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். தொடர்ந்து கனமழை பெய்வதால், ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்.
இதற்காக, வால்பாறை நகரில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வயநாடு சம்பவம் போல் வால்பாறையும் ஆகிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு, கூறினார்.
ஆய்வின் போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெயஸ்ரீமுரளிதரன், பொள்ளாச்சி சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி உட்பட பலர் உடன் இருந்தனர்.