/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துார்வாரப்படாமல் மறையும் 'ராஜ'வாய்க்கால் குமரலிங்கம் விவசாயிகள் குமுறல்; ஒதுக்கும் நிதி மாயமாவதாக புகார்
/
துார்வாரப்படாமல் மறையும் 'ராஜ'வாய்க்கால் குமரலிங்கம் விவசாயிகள் குமுறல்; ஒதுக்கும் நிதி மாயமாவதாக புகார்
துார்வாரப்படாமல் மறையும் 'ராஜ'வாய்க்கால் குமரலிங்கம் விவசாயிகள் குமுறல்; ஒதுக்கும் நிதி மாயமாவதாக புகார்
துார்வாரப்படாமல் மறையும் 'ராஜ'வாய்க்கால் குமரலிங்கம் விவசாயிகள் குமுறல்; ஒதுக்கும் நிதி மாயமாவதாக புகார்
ADDED : ஜூன் 26, 2024 09:45 PM

உடுமலை : துார்வாரப்படாமல், புதர் மண்டி, கழிவு நீர் தேங்கி, ராஜவாய்க்கால் படிப்படியாக சீரழிந்து வருவதால், குமரலிங்கம் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்; பராமரிப்புக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.
மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் சுற்றுப்பகுதியில், நெல் பிரதான சாகுபடியாக உள்ளது. அமராவதி அணை பாசனத்திட்டம், பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், குமரலிங்கம் விளைநிலங்களுக்கு ராஜவாய்க்கால் வாயிலாக தண்ணீர் திறக்கப்படுகிறது.
சீசன்தோறும் போராட்டம்
பல ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு ஆதாரமான ராஜவாய்க்கால், கழிவு நீர் சாக்கடையாக மாறி விட்டது. துார்வாரப்படாமல், மண் தேங்கி, தண்ணீர் செல்வதே தெரியாத அளவுக்கு, ஆகாயத்தாமரை செடிகள் வாய்க்கால் முழுதும் ஆக்கிரமித்துள்ளது.விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லாததால், விவசாயிகளே கழிவு நீர் தேங்கியுள்ள பகுதியில், இறங்கி, ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் இதர கழிவுகளை அகற்றி வருகின்றனர்.
இத்தகைய அவலத்தால், கடைமடை பகுதிகளுக்கு போதிய பாசன நீர் கிடைக்காமல், நெல் சாகுபடியில், விளைச்சல் குறைகிறது. தற்போது அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், ராஜவாய்க்காலின் நிலையை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை உள்ளது.
அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: நெல் சாகுபடிக்கு ஆதாரமான ராஜவாய்க்கால், கடந்த சில ஆண்டுகளாக சீரழிந்து பரிதாப நிலைக்கு மாறி விட்டது. தண்ணீர் திறப்புக்கு முன், அடிப்படை பராமரிப்பு பணிகளை கூட பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
முன்பு, ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் ஒருங்கிணைந்து, வாய்க்கால் துார்வாரும் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வாய்க்கால் பராமரிப்புக்காக அரசால் ஒதுக்கப்படும் நிதியில், பெயரளவுக்கு கூட பணிகள் மேற்கொள்வதில்லை.
பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளும் இப்பிரச்னையை கண்டுகொள்வதில்லை. படிப்படியாக ராஜவாய்க்காலும், அப்பகுதியில் நெல் சாகுபடியும் மறைந்து வருகிறது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறப்பு குழு அமைத்து, ராஜவாய்க்கால் பகுதியில், ஆய்வு செய்ய வேண்டும்; பராமரிப்பு மற்றும் துார்வாரும் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் நிலை குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.