ADDED : ஆக 07, 2024 01:36 AM

கோவை:கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்த, தி.மு.க.,வின் கல்பனா, ராஜினாமா செய்ததால், புதிய மேயரை தேர்ந்தெடுக்க, நேற்று காலை, 10:30 மணிக்கு மறைமுகத் தேர்தல் நடந்தது. முன்னாள் மேயர் கல்பனா உட்பட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுரு பிரபாகரனிடம் இருந்து, மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரங்கநாயகி விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்தார். மாநகராட்சி, 72வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ் முன்மொழிந்தார். 71வது வார்டு கவுன்சிலர் அழகு ஜெயபாலன் வழிமொழிந்தார்.
வேட்புமனுவை காலை, 10:50 மணிக்கு ரங்கநாயகி தாக்கல் செய்தார். காலை, 11:00 மணி வரை வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, கோவை மாநகராட்சியின் 7வது மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக, சிவகுரு பிரபாகரன் அறிவித்தார்.
விக்டோரியா ஹாலுக்கு, அமைச்சர்கள் நேரு, முத்துசாமி வந்ததும், மேயராக ரங்கநாயகி உறுதிமொழி ஏற்றார்.
அவரிடம், மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர்கள் வழங்கி, மேயர் இருக்கையில் அமர வைத்தனர். மேயருக்கான செங்கோலை அமைச்சர் நேரு வழங்க, ரங்கநாயகி பெற்றுக் கொண்டார்.