ADDED : மார் 29, 2024 01:29 AM

கோவை;''தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலான வளர்ச்சி உள்ளது,'' என, மாநில தொழில்துறை அமைச்சர் ராஜா பேசினார்.
கிரடாய், சிபாகா, பில்டர்ஸ் ஆசோசியேஷன் ஆப் இந்தியா கோவை கிளை இணைந்து, 'நமது லோக்சபா வேட்பாளரை அறிந்து கொள்வோம்' எனும் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
மாநில தொழில்துறை அமைச்சர் ராஜா பேசியதாவது:
தி.மு.க., ஆட்சி உறுதியளித்த படி நடந்துக் கொள்கிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு வாயிலாக, ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில், ரூ.9.73 லட்சம் கோடி முதலீடு தமிழகத்துக்கு வந்துள்ளது. துாத்துக்குடியில், ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களுக்கு இது, மிகப்பெரிய வளர்ச்சி. கொங்கு மண்டலம் தொழில்துறையில் முன்னணியில் உள்ளது. துறை வாரியாக திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. கோவையை பொறுத்தவரை மிகப் பெரிய தொழில் வளர்ச்சி காத்திருக்கிறது. வெகு விரைவில் விமான நிலையம் விரிவாக்கம் வர உள்ளது.
தமிழத்தில் மட்டும் தான் அனைத்து பகுதிகளிலும் பரவலான வளர்ச்சி உள்ளது. அவசரமாக ஜி.எஸ்.டி., செயல்படுத்தப்பட்டதால் தான், தற்போது வரை பிரச்னை உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை. தொழில், கட்டுமானத் துறையினரின் கோரிக்கைகள் முழுமையாக ஆராய்ந்து செயல்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
'கிரடாய்' தலைவர் குகன் வரவேற்றார். சிபாகா தலைவர் சகாயராஜ், பில்டர்ஸ் ஆசோசியேஷன் ஆப் இந்தியா கோவை கிளை துணைத்தலைவர் லட்சுமணன், கிரடாய் செயலாளர் அரவிந்த்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

