ADDED : ஜூன் 26, 2026 05:20 PM
புது பஸ் ஸ்டாண்டை பயன்படுத்த... பஸ் நிறுத்தங்களில் அதிகாரிகள் ஆய்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கோவை ரோட்டில் கட்டப்பட்டுள்ள புது பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில், கோவை ரோடு சி.டி.சி. மேட்டில், 3.25 ஏக்கர் பரப்பளவில், 9.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இந்த பஸ் ஸ்டாண்டை கடந்த ஆட்சிக்காலத்தில், துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
இந்த பஸ் ஸ்டாண்டில், முதற்கட்டமாக திருப்பூர், பல்லடம் வழித்தட பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கோபி, கொடுமுடி, சக்தி, பன்னாரி, ஈரோடு, சேலம், அந்தியூர், தாராபுரம், கரூர் உள்ளிட்ட வழித்தட பஸ்கள் இங்கிருந்து இயக்கப்பட உள்ளன.
இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோவை ரோடு வழியாக வந்து நியூஸ்கீம் ரோடு வழியாக திரும்பி, பல்லடம் ரோடுக்கு பஸ்கள் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று, திருப்பூர், பல்லடத்தில் இருந்து வரும் பஸ்கள், கோவை ரோடு வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, சப்–கலெக்டர் தலைமையிலான குழுவினர் சில மாதங்களுக்கு முன், பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, பஸ் நிறுத்தம், போக்குவரத்து நெரிசல் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, பொள்ளாச்சி – கோவை ரோட்டில், பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே பஸ் நிறுத்தப்பகுதியிலும், அதுபோன்று பழைய சாந்தி தியேட்டர் அருகே உள்ள காலி இடத்திலும் நிழற்கூரை அமைக்கும் பணிகள் நடக்கிறது. பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து நகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நகராட்சி கமிஷனர் குமரன் கூறியதாவது:
கோவை ரோடு புது பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் நடக்கின்றன. மூன்று இடங்களில் புதிதாக பயணியர் நிழற்கூரை அமைக்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்டில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரப்பணிகள், கழிப்பிடம் துாய்மை செய்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.
பஸ் ஸ்டாண்டில் மின்விளக்குகள், குடிநீர் வசதிகள் சரிபார்க்கப்படுகிறது. விளம்பர பதாகைகள், 20 இடங்களில் நிறுவப்பட உள்ளன. புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் பஸ்கள் விபரம் குறிப்பிடப்பட உள்ளது. ஆட்டோ நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு விரைவில் பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு, கூறினார்.
