/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளிவட்டச்சாலை அமைக்க அமைச்சருக்கு பரிந்துரை
/
வெளிவட்டச்சாலை அமைக்க அமைச்சருக்கு பரிந்துரை
ADDED : செப் 05, 2024 12:08 AM
அன்னுார் : அன்னுாரில், வெளிவட்டச் சாலை அமைக்க, அமைச்சர் முத்துசாமி நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், அவிநாசி மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலைக்கும் மையமாக அன்னுார் உள்ளது. இதனால் அன்னுாரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதை அடுத்து அன்னுாரில் கிழக்கு புறவழிச்சாலை அமைக்க ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் தரப்பட்டது. அதன் பிறகு இத்திட்டம் முடங்கி கிடக்கிறது.
இதேபோல் மேற்கு புறவழிச் சாலை அமைக்க மத்திய அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கிய பின்னும் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி தராததால் பணி முடங்கிக் கிடக்கிறது. இதற்கு தீர்வாக அன்னுார் நகரை சுற்றி வெளிவட்டச் சாலை அமைக்க வேண்டும் என்று அன்னுார் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரு நாட்களுக்கு முன்பு பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் மற்றும் கவுன்சிலர்கள், அமைச்சர் முத்துசாமியிடம் வெளிவட்ட சாலை அமைக்க பரிந்து ரைக்குமாறும் கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து அமைச்சர் முத்துச்சாமி, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,' அன்னுரில் பல ஆண்டுகளாக உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வெளிவட்டச் சாலை அமைக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தெரிவித்துள்ளார். 'அமைச்சரின் பரிந்துரை கடிதத்தால் பணி துவங்கினால், அன்னுார் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்,' என மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.