/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் பூத்களுக்கு தடையின்மை சான்று வழங்க மறுப்பு; விதிமுறையை மீறி சிக்னல்களில் இருந்து மின் இணைப்பு
/
போலீஸ் பூத்களுக்கு தடையின்மை சான்று வழங்க மறுப்பு; விதிமுறையை மீறி சிக்னல்களில் இருந்து மின் இணைப்பு
போலீஸ் பூத்களுக்கு தடையின்மை சான்று வழங்க மறுப்பு; விதிமுறையை மீறி சிக்னல்களில் இருந்து மின் இணைப்பு
போலீஸ் பூத்களுக்கு தடையின்மை சான்று வழங்க மறுப்பு; விதிமுறையை மீறி சிக்னல்களில் இருந்து மின் இணைப்பு
ADDED : மார் 06, 2025 06:17 AM
கோவை; கோவை நகர்ப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் பூத்களுக்கு, தடையின்மை சான்று வழங்க, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறைகள், மாநகராட்சி நிர்வாகம் மறுத்து விட்டது. அதனால், தானியங்கி சிக்னல்களில் இருந்து, மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
கோவை மாநகர போலீசார், 'ஸ்பான்சர்' மூலமாக, 50 போலீஸ் பூத்கள் தயார் செய்து, நகர்ப்பகுதியில் ஆங்காங்கே அமைத்து வருகின்றனர். இதில், அரசு விதிமுறைகள் மற்றும் ஐகோர்ட் உத்தரவுக்கு மாறாக, விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு மின் இணைப்பு பெற வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட அரசு துறைகளில் இருந்து தடையின்மை சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறைகளுக்கு, சொந்தமான ரோடுகளில் வைக்க வேண்டுமெனில், அத்துறைகளில் தடையின்மை சான்று பெற வேண்டும்.
மாநகராட்சி ரோடுகளில் போலீஸ் பூத் வைப்பதற்கு, மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் தடையின்மை சான்று பெற வேண்டும். மூன்று அரசு துறைகளிலும் சான்று பெறாமல், விளம்பர பலகைகளுடன் கூடிய, போலீஸ் பூத்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அரசு துறைகளில் இருந்து தடையின்மை சான்று வழங்க வாய்ப்பில்லை என போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டு விட்டது. அதைத்தொடர்ந்து, விதிமீறல் என்று தெரிந்தும் கூட, போக்குவரத்து போலீசார், விளம்பர பலகைகளுடன் கூடிய போலீஸ் பூத்களை தொடர்ந்து வைத்து வருகின்றனர்.
தானியங்கி சிக்னல்களுக்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்பில் இருந்து, தற்போது போலீஸ் பூத்களுக்கு இணைப்பு வழங்கியிருக்கின்றனர். இதுவும் தவறான செயல்.
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ''தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறைகளுக்கு சொந்தமான ரோடுகளுக்கு, மாநகராட்சியில் இருந்து தடையின்மை சான்று வழங்க முடியாது; வழங்குவதற்கு வாய்ப்பில்லை,'' என்றார்.
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'கோவை நகர்ப்பகுதியில் உள்ள போலீஸ் பூத்களுக்கு மின் இணைப்பு தருவதற்கு, இதுவரை விண்ணப்பம் வரவில்லை. விதிமுறை மீறி, மின் இணைப்பு எடுத்திருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.