/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.200 கோடியில் நொய்யல் ஆறு வழித்தடம் சீரமைப்பு; விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கிறது மாநகராட்சி
/
ரூ.200 கோடியில் நொய்யல் ஆறு வழித்தடம் சீரமைப்பு; விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கிறது மாநகராட்சி
ரூ.200 கோடியில் நொய்யல் ஆறு வழித்தடம் சீரமைப்பு; விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கிறது மாநகராட்சி
ரூ.200 கோடியில் நொய்யல் ஆறு வழித்தடம் சீரமைப்பு; விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கிறது மாநகராட்சி
ADDED : ஆக 02, 2024 05:19 AM
கோவை : காவிரியின் உப நதியான நொய்யல் ஆறு, கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் வழியாக, 158.35 கி.மீ., துாரம் பயணித்து, காவிரியில் கலக்கிறது.
கோவை மாவட்டத்தில், 62.21 கி.மீ., துாரம் பயணிக்கும் நொய்யல் ஆற்றின் குறுக்கே, 17 அணைக்கட்டுகள், 25 குளங்கள் உள்ளன.
இதில், நகர பகுதியில் உள்ள ஒன்பது குளங்கள் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளன. இக்குளங்களை இணைக்கும் நீர் வழங்கு வாய்க்கால்களை பராமரிக்கும் பொறுப்பும் மாநகராட்சியை சேர்ந்தது.
நொய்யல் ஆறு மாசுபடுவதில் இருந்து தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இரு கரைகளிலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்கனவே கட்டமைப்புகள், பூங்காக்கள் ஏற்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்க, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு அறிவுறுத்தியிருக்கிறார்.
இதையடுத்து, நொய்யல் ஆறு சீரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளை, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள, மாநகராட்சி உத்தேசித்துள்ளது.
இதன் முதல் பணியாக, ஆற்றின் இருபுறமும் சர்வே செய்து, கல் நட அறிவுறுத்தப்பட்டிருக்கிது. நொய்யல் ஆறு மாசுபடும் இடங்களில் கழிவு நீர் மாதிரி எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும்.
நில அளவீடு செய்து ஆறு சீரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கையை, தனியார் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் தயாரிக்க , மாமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், 'நடந்தாய் வாழி காவேரி' திட்டத்திலும் நொய்யல் ஆறு சேர்க்கப்பட்டு, ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு பங்களிப்பாக ரூ.900 கோடி, மாநில அரசு பங்களிப்பாக ரூ.300 கோடி என, ரூ.1,200 கோடி ஒதுக்கப்படும். இதில், கோவை மாவட்டத்துக்கு ரூ.62 கோடி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இத்தொகையில், மாவட்டத்தின் இதர பகுதிகளில் நொய்யல் கரையை பலப்படுத்துதல், படித்துறை உருவாக்குதல், கரையோர ஆக்கிரமிப்பு அகற்றுதல், வாய்க்கால்களில் கழிவு நீர் கலக்காத வகையில், உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து, சுத்திகரிப்பு நிலையம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.