/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
23 விளம்பர பலகைகள் அகற்றம்: மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை
/
23 விளம்பர பலகைகள் அகற்றம்: மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை
23 விளம்பர பலகைகள் அகற்றம்: மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை
23 விளம்பர பலகைகள் அகற்றம்: மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை
ADDED : மே 05, 2024 12:17 AM

கோவை:கோவையில், 14 இடங்களில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த, 23 விளம்பர பலகைகளை, நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அகற்றினர்.
கோவை மாநகராட்சி அதிகாரிகள், லோக்சபா தேர்தல் பணியில் பிசியாக இருந்ததால், வழக்கமான வேலையை சற்று ஒதுக்கி வைத்திருந்தனர். இத்தருணத்தை பயன்படுத்தி, நகரில் ஆங்காங்கே மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன.
படத்துடன் நேற்று முன்தினம் நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி வைத்துள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற, நகரமைப்பு பிரிவினருக்கு மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.
நகரமைப்பு அலுவலர் குமார் தலைமையில், மண்டல உதவி நகரமைப்பு அலுவலர்கள், அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த விளம்பர பலகைகளை நேற்று அகற்றினர். கிழக்கு மண்டலத்தில் ஹோப்ஸ் அருகே காமராஜ் ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலம் அருகில், விளாங்குறிச்சி, விளாங்குறிச்சி - காளப்பட்டி ரோடு, திருச்சி ரோட்டில் பெர்க்ஸ் ஆர்ச் அருகில் என, ஐந்து இடங்களில் எட்டு விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.
மத்திய மண்டலத்தில் ஸ்டேட் பாங்க் ரோட்டில் எஸ்.பி., அலுவலகம் எதிரே இரண்டு விளம்பர பலகைகள் எடுக்கப்பட்டன. வடக்கு மண்டலத்தில் சத்தி மெயின் ரோட்டில் காளப்பட்டி ஜங்சன், துடியலுார் - சரவணம்பட்டி ரோட்டில் இரு விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.
தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி ரோட்டில் குறிச்சி குளக்கரை அருகே ஒரு கட்டடத்தில் ஒரு விளம்பர பலகை அகற்றப்பட்டது. மேற்கு மண்டலத்தில் தடாகம் ரோட்டில் 4, வடவள்ளி - இடையர்பாளையம் ஜங்சன் - 1, வடவள்ளி - இடையர்பாளையம் ரோடு - 2, பி.என்.புதுார் மருதமலை ரோடு - 1, இடையர்பாளையம் - கவுண்டம்பாளையம் ரோடு - 2 என, ஐந்து இடங்களில், 10 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. மொத்தமாக, மாநகராட்சி எல்லைக்குள் மட்டும் ஒரே நாளில், 14 இடங்களில், 23 விளம்பர பலகைகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அகற்றியுள்ளனர்.
மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், 'விளம்பர பலகைகள் அகற்றிய இடத்தில், இரும்பு சட்டங்களை அறுத்தெடுக்க, மண்டல உதவி நகரமைப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
'மாநகராட்சி அறிவிப்புகளை மீறி, மீண்டும் மீண்டும் ஒரே கட்டடத்தில் விளம்பர பலகைகள் வைக்கப்படுவது தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்' என்றனர்.