/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி பூங்காவில் மூங்கில் மரங்கள் வெட்டி அகற்றம்
/
நகராட்சி பூங்காவில் மூங்கில் மரங்கள் வெட்டி அகற்றம்
நகராட்சி பூங்காவில் மூங்கில் மரங்கள் வெட்டி அகற்றம்
நகராட்சி பூங்காவில் மூங்கில் மரங்கள் வெட்டி அகற்றம்
ADDED : செப் 11, 2024 02:49 AM

பொள்ளாச்சி:சிறந்த நகராட்சிக்கான விருது நினைவு பூங்கா, பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு இருந்த மூங்கில் மரங்களை, 'நான் தான் வெட்டி அகற்ற சொன்னேன்' என, ஆளுங்கட்சி கவுன்சிலரே சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி மாநிலத்தில் சிறந்த நகராட்சிக்கான விருதினை கடந்த, 2012ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதற்காக அரசு சார்பில், 15 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
விருதுக்காக வழங்கப்பட்ட, 15 லட்சம் ரூபாய் மற்றும், 10 லட்சம் ரூபாய் நகராட்சி நிதியுடன் மொத்தம், 25 லட்சம் ரூபாய் செலவில், விருது பெற்றதன் நினைவாக, நான்காவது வார்டில் சொர்ணபுஷ்பம் காலனியில், 50 சென்ட் பரப்பில் பூங்கா மேம்படுத்தப்பட்டது.
சுற்றுச்சுவர், இருக்கை, குழந்தைகள் விளையாட்டு உபகரணம், துளசி என மூலிகை செடிகள் பெயர்கள் பதிவிடப்பட்ட கட்டமைப்புகளுக்கு நடுவே செடிகளும் நடப்பட்டன. நடைபாதையும் அமைக்கப்பட்டன.
ஆனால், பராமரிக்கப்படாமல் இருக்கைகள் சிதிலமடைந்தன. சீசா, சறுக்கு விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி உள்ளன.
இந்நிலையில், பூங்காவில், 11 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட மூங்கில்கள் திடீரென வெட்டி அகற்றப்பட்டுள்ளன. முழுமையாக வெட்ப்பட்ட மரங்கள் எங்கே என்ற விபரம் தெரியாததால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர்.
முன்னாள் கவுன்சிலர் நீலகண்டன் கூறுகையில், ''நகராட்சிக்கு விருது கிடைத்ததன் நினைவாக அமைக்கப்பட்ட பூங்கா, பராமரிப்பின்றி உள்ளது. 11 ஆண்டுகளாக வளர்ந்த மூங்கில் மரங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வெட்டி அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூங்கா புதர்களை அகற்றுவதாக கூறி முழுவதுமாக மரங்களை வெட்டியதும்; அந்த மரங்கள் எங்கே சென்றது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும்,'' என்றார்.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில், ''சொர்ணபுஷ்பம் காலனி பூங்கா புதராக இருப்பதாகவும், விஷ பூச்சிகள் வருவதாகவும், சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் நடவடிக்கை எடுக்க இருந்தது.இந்நிலையில், பூங்காவை யார் சுத்தம் செய்தனர்; அனுமதியில்லாமல் மரங்களை வெட்டியது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.