/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளிமலைபட்டிணத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
வெள்ளிமலைபட்டிணத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஆக 17, 2024 12:17 AM

தொண்டாமுத்தூர்:வெள்ளிமலைபட்டிணத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை, அதிகாரிகள் நேற்று அகற்றினர்.
பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளிமலைபட்டிணம் கிராமத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள, வாய்க்கால் காட்டு பள்ளம் பகுதியில், நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளதாக வெள்ளிமலைபட்டிணத்தை சேர்ந்த காளிச்சாமி,75 என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனால், நீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, அதே கிராமத்தை சேர்ந்த காளிச்சாமி,52 என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, அப்பகுதியில், பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து அளவீடு செய்ததில், நீர் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்து இருந்தது உறுதி செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள, 23 தென்னை மரங்கள், நீர் செல்ல தடையாக உள்ளதாக பொதுப்பணித்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, நீர் செல்ல இடையூறாக உள்ள 23 மரங்களையும் வெட்டி அகற்றவும் கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.
பேரூர் தாசில்தார் லாவண்யா, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) உதவி செயற்பொறியாளர் அம்சராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வி.ஏ.ஓ.,க்கள், போலீசார் ஆகியோர் இணைந்து, நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக, சுமார், 60 சென்ட் இடத்தில், நீர் செல்ல தடையாக இருந்த, 23 தென்னை மரங்களை வெட்டி அகற்றினர். அதன்பின், மீதமுள்ள ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ள தென்னை மரங்களை, வெள்ளிமலை பட்டினம் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல், இப்பகுதியில், நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.