/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுமக்களை அச்சுறுத்தும் தென்னை மரத்தை அகற்றுங்க!
/
பொதுமக்களை அச்சுறுத்தும் தென்னை மரத்தை அகற்றுங்க!
ADDED : மே 10, 2024 11:10 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு - நெகமம் செல்லும் ரோட்டில், அச்சுறுத்தும் வகையில் உள்ள தென்னை மரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிணத்துக்கடவு - வடசித்தூர், வடசித்தூர் - நெகமம் மற்றும் வடசித்தூர் - குருநல்லிபாளையம் செல்லும் ரோட்டில் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த வழித்தடங்களில், பைக்கில் செல்பவர்களே அதிகம்.
இந்த ரோட்டில் இரண்டு பக்கமும், அதிக அளவு தென்னை மரங்களே உள்ளன. இதில், சில மரங்கள், தோப்பில் இருந்து ரோட்டின் மையப்பகுதி வரை வளைந்து வளர்ந்துள்ளது. இதனால் மரத்தில் தேங்காய், மட்டை மற்றும் குரும்பைகள் ரோட்டின் நடுவே விழுகிறது.
சில நேரங்களில் பைக் ஓட்டுனர்கள் மீது விழுவதால், விபத்து ஏற்படுகிறது. தலையில் காயமடைகின்றனர். கார் போன்ற வாகனங்களில் முன்பக்க கண்ணாடி உடைகிறது.
இந்த வழித்தடத்தில் மிக உயர்ந்த தென்னை மரங்கள் அதிகம் உள்ளதால், வாகனங்களில் அச்சத்துடன் செல்லும் நிலையே உள்ளது. மேலும், ரோட்டின் ஓரத்தில் மின் கம்பங்கள் இருப்பதால் பெரிய அளவிலான விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.
அசம்பாவிதம் ஏற்படும் முன், அந்தந்த ஊராட்சி நிர்வாகம் இதை கவனித்து, ரோட்டின் மையப்பகுதி வரை வளர்ந்திருக்கும் தென்னை மரத்தை வெட்டி அகற்ற, விவசாயிகளிடம் அறிவுறுத்த வேண்டும், என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.