/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல்
/
அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல்
ADDED : செப் 10, 2024 12:14 AM
மேட்டுப்பாளையம்:அன்னுார் மேட்டுப்பாளையம் தாலுகா பகுதிகளில், தொழிற்பேட்டை அமைப்பதற்கு, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேணுகோபால் கூறியதாவது:-
அன்னுார், மேட்டுப்பாளையம் தாலுகாவை உள்ளடக்கிய பகுதிகளில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் 3,800 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு, அறிவிப்பு வந்தது. தமிழக அரசு சார்பில் அரசாணையும் வெளியிடப்பட்டது. அப்போது, விவசாயிகள் ஒன்று திரண்டு, இத்திட்டத்திற்கு விவசாய நிலங்களை எடுக்கக்கூடாது என போராடினோம். இதையடுத்து அப்போதைய மாவட்ட கலெக்டர் சமீரன் மற்றும் நீலகிரி எம்.பி. ராஜா உள்ளிட்டோர், விவசாய நிலங்கள் எடுக்கப்படாது என வாக்குறுதி அளித்தனர்.
பின், அண்மையில் அப்பகுதிகளில் விவசாய நிலங்களை பத்திரபதிவு செய்ய அன்னுார் பத்திரபதிவு அலுவலகத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் மீண்டும் பத்திரபதிவு நடந்தது. இனி வரும் நாட்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். விவசாய நிலங்கள் எடுக்காமல் இருக்க தமிழக அரசு உறுதி அளிக்க வேண்டும். இதுகுறித்து, கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
---