ADDED : ஜூன் 09, 2024 11:38 PM
தி.மு.க.,வை முந்திய பா.ஜ.,
பொள்ளாச்சி லோக்சபா தேர்தலில், யாரும் எதிர்பாராத விஷயங்கள் நடந்துள்ளன. அதில், நகரப்பகுதியில், 186, 188, 196, 198, 199, 200, 216, 218, 246, 247 என பல பூத்களில், தி.மு.க., - அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., முதலிடம் பெற்றுள்ளது.
அ.தி.மு.க.,வில், இரட்டை படையில் ஓட்டுகள் பெற்ற வார்டிலும், பா.ஜ., மூன்று இலக்க ஓட்டு பெற்றுள்ளது.அதில், 198வது பூத்தில், 218 ஓட்டுகளும், 200வது பூத்தில், 203 ஓட்டுகளும் பெற்று, தி.மு.க.வை இரண்டாமிடத்துக்கு தள்ளியது. அதிகபட்சமாக, 196வது பூத்தில், 351 ஓட்டுகள் பெற்றுள்ளது.
நகரில் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க., அதிக ஓட்டுகள் வாங்கினாலும், பல பூத்களில், பா.ஜ., அந்த ஆளுங்கட்சியை பின்னுக்கு தள்ளியதால் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மகாலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில், ஓட்டு சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. மகாலிங்கபுரம் பகுதியில் தான் நகராட்சி தலைவரின், 10வது வார்டும் உள்ளது. அவர் பொறுப்பில் உள்ள வார்டிலேயே ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சரக்கு 'ஸ்பாட் டெலிவரி'
'ஸ்பாட் டெலிவரி' அளவுக்கு, கிராமங்களில், 'சில்லிங்' மதுவிற்பனை பிஸினஸ் அடுத்த லெவலுக்கு போயும், போலீசார் சைலன்டாக இருக்காங்க, என, நண்பர் கூறினார்.
எந்த ஊருல இப்படி நடக்குதுனு விசாரித்தேன். குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டிலுள்ள, கிராமங்களில் தான் இந்த கூத்து நடக்குது. அதிகாலை முதலே 'சில்லிங்' முறையில், மதுவிற்பனை ஜோராக நடக்கிறது.
இதில், தொழில் போட்டி அதிகரித்து, அடுத்த கட்டத்துக்கு, சென்று விட்டனர். 'டாஸ்மாக்' விடுமுறை நாட்களிலும், பிற நாட்களில், காலை வேளையிலும், போன் செய்தால் போதும், டூவிலரில், சரக்கு பாட்டில்களை 'ஸ்பாட் டெலிவரி' முறையில், 'குடி'மகன்களுக்கு வினியோகம் செய்யறாங்க.
இதனால, கிராம மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் முழுவதும், காலை நேரத்திலேயே 'குடி'மகன்கள் அலப்பறையை துவங்கி விடுகின்றனர். இப்படி அனைத்து கிராமங்களிலும், 'சில்லிங்' மதுவிற்பனை படிப்படியாக 'அப்டேட்' ஆனாலும், குடிமங்கலம் போலீசார் மட்டும் சைலன்டாகவே இருக்காங்க. அவங்களுக்கும் மாதம் தோறும் 'கவனிப்பு' இருப்பதே எல்லாத்துக்கும் காரணம், என, வேதனையுடன் 'அப்டேட்' செய்தார்.
அட்டையை பதுக்கி அள்ளுறாங்க!
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான ஊராட்சிகளில், வேலை உறுதி திட்ட பணியாளர்களின் அடையாள அட்டையை, ஊராட்சி நிர்வாகத்தினரோ, அவர்கள் சார்ந்தவர்களோ வாங்கி வைச்சுக்கறாங்க. பயனாளிகளுக்கு ஒதுக்கற நிதியை 'அபேஸ்' பண்ணுறாங்கனு தகவல் கிடைத்தது.
வேலை உறுதி திட்ட பயனாளிகளிடம் விசாரித்தோம். அவங்க, இதன் பின்னணியில் பெரும் முதலைகள் இருக்கு என, விபரத்தை கூறினர்.
வேலை நாட்கள் முடிந்தாலும், அட்டையை திரும்ப தருவதில்லை. பல்வேறு அரசுத்திட்ட பணிகளில், வேலை உறுதி திட்ட பணியாளர்களை குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த அரசாணை இருக்கு.
ஆனா, பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர், விதிகளை மீறி இயந்திரத்தை பயன்படுத்தி பணிகளை முடித்து கொள்கின்றனர். அதுக்கப்புறம், திட்டத்தில் ஒதுக்கப்படும், பணியாளர்களுக்கான ஒதுக்கீட்டு தொகையை, தங்கள் பாக்கெட்டில் போட்டுக்கறாங்க.
இது குறித்து கேள்வி கேட்டால், வேலை தராமல் போயிருவாங்கன்னு பணியாளர்கள் பயந்துட்டு, அவங்க சொல்ற இடத்துல கையெழுத்து போடுறாங்க. முறையாக தணிக்கை நடத்தினா, பல ஊராட்சிகளில் நடக்கிற பிரச்னை வெளியில் வரும். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தா பல உண்மைகள் வெளியே வரும், என பகீர் தகவலை சொன்னாங்க.
'கரன்சி'க்காக பொருட்கள் களவாடல்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில், 78 ஆண்டுகள் பழமையான காளைகள் பராமரிப்பு கூடம் இரண்டு இருந்தது. விலை அதிகம் உள்ள தேக்கு மரங்களால் செய்யப்பட்ட கட்டுமானம் என பாரம்பரிய கட்டடமாக இருந்தது.
அதனை பராமரித்து பாதுகாப்பதில், அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். புதர் மண்டி காணப்பட்ட நிலையில், ஒரு கட்டடத்தை இடித்து, இரண்டு லாரிகளில், பழமையான பொருட்கள் கொண்டு சென்றனர்.
எந்த அனுமதியும் பெறாமல், உரிய டெண்டர் விடாமல், ஒரு சில அதிகாரிகள் பழமையான பொருட்களை விற்று, பல லட்சங்களை பதுக்கினர். தற்போது, இன்னொரு காளைகள் கூடமும், புதர் மண்டியுள்ளது. இதனை முறையாக பராமரித்து, பாதுகாக்க வேண்டும், என்பது விவசாயிகள் கோரிக்கை.
ஆனால், அதனையும் இடித்து பழமையான இரும்பு, மர சாமான்கள், கற்களை விற்று, பணம் பண்ணலாம் என்பது கால்நடைத்துறை அதிகாரிகள் திட்டம். இருக்கும் கட்டடத்தை பராமரிக்காமல், 'கரன்சி'க்காக கட்டடத்தை இடித்து தள்ளுகின்றனர். இதை தடுக்க யாரும் இல்லை என்பதே ஆதங்கம்.
எப்படி இருந்த ஊரு... இப்படி ஆயிருச்சு!
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டில் நண்பரை சந்தித்தேன். எப்படி இருந்த ஊரு இப்படி மாறி போச்சு, 'சரக்கு' ஆறா ஓடுது என, ஏக கோபத்துடன் பேசினார். என்ன நடந்ததுனு விசாரித்தேன்.
கிணத்துக்கடவுக்கு உட்பட்ட, டாஸ்மாக் மதுக்கடை 'பார்'களில், விதிமுறை மீறி காலை முதலே 'சரக்கு' விற்பனை நடக்குது. இதுமட்டுமில்லாம, கிராமத்துல பல இடங்களில் பதுக்கி வைத்து விற்கறாங்க. இதனால், காலை, 8:00 மணிக்கே 'சரக்கு' பாட்டிலும் கையுமா தான், கூலி வேலைக்கு போறாங்க. வேலை செய்யற இடத்திலும் போதையில் பிரச்னை பண்ணுறாங்க.
சிலர், மதுபாட்டிலை வாங்கிட்டு, ரோடு, கல்வெட்டு பாலங்களில் அமர்ந்து குடிக்கறாங்க. காலி பாட்டிலை ரேட்டுல உடைத்து சிதற விடுறாங்க. உணவு பொட்டலத்தையும் அப்படியே வீசிட்டு போறாங்க. அதை சாப்பிட வரும் தெருநாய்கள், ரோட்டில் கிடைக்கும் பாட்டில் சிதறல்களால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விழுறாங்க.
போதை ஆசாமிகள் சிலர், ரோட்டோரத்துல அரைகுறை ஆடைகளோடு உருண்டு கிடக்கறாங்க. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்ல. இதையெல்லாம் போலீஸ் பாத்துட்டு தான் இருக்கு. 'சரக்கு' விற்பனை பின்னணியில் ஆளுங்கட்சி தலையீடு இருப்பதால், போலீசாரும் நடவடிக்கை எடுக்குறதில்ல. அதனால, கோவை எஸ்.பி.,க்கு மக்கள் புகார் அனுப்பியிருக்கோம், என்றார்.
