கழிப்பிடத்திலும் 'காசு' பார்க்கறாங்க!
உடுமலை சந்தைக்கு போயிருந்தேன். சந்தைக்கு வந்திருந்த விவசாயி ஒருவர், 'கட்டண கழிப்பிடத்தில், கட்டண கொள்ளையடிக்கறாங்க, என்றார். அதுக்கு, இன்னொரு விவசாயி, 'கட்டண கொள்ளையில அதிகாரிகளுக்கும் பங்கிருக்குனு பேச ஆரம்பித்தார்.
சந்தை வளாகம் அருகில், நகராட்சி கட்டண கழிப்பிடம் ஏலம் நடந்த போது, நேரடியாக ஏலம் கோரியது மற்றும் டெண்டர் முறையில் ஏலம் நடந்தது. இரண்டிலும், ஒருத்தரு, 4.56 லட்சத்துக்கு ஏலம் கோரியிருந்தார்.
சிறிது நேரத்தில், வேறு நபருக்கு, 4 லட்சத்து, 56 ஆயிரத்து, ஒரு ரூபாய்க்கு ஏலம் இறுதி செய்து, நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்தம் வழங்கியுள்ளனர். ஒரு ரூபாயில், டெண்டரை வேறு ஒருவருக்கு வழங்கியிருக்காங்க. டெண்டரில் முறைகேடு நடந்திருக்குனு பாதிக்கப்பட்டவர்கள், நகராட்சி தலைவரிடம் புகார் கொடுத்திருக்காங்க.
அதனால, கழிப்பிட கட்டணத்தை உயர்த்தியிருக்காங்க. சிறுநீர் கழிக்க 5 ரூபாய் வசூலித்து வந்த நிலையில், புதிதாக ஏலம் எடுத்த நபர், ஏழு ரூபாயாக உயர்த்திட்டாரு. கழிப்பிடத்துக்கு, 10 ரூபாய் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கறாங்க. இதையெல்லாம் அதிகாரிகள் கண்டுக்கறதில்லை.
இதுல, அதிகரிகளுக்கும் பங்கு இருக்காம். கழிப்பிடத்திலும், 'காசு' பார்க்கும் நகராட்சி அதிகாரிகளால் உடுமலை நகரம் 'நாறி' போயிருக்குனு, சொல்லி முடித்தார்.
இவங்கெல்லாம் திருந்தவே மாட்டாங்க!
வால்பாறை நகராட்சியில எந்த வேலையும் உருப்படியா நடக்கிறதில்ல என, பஸ் வருகைக்கு காத்திருந்த முதியவர்கள் பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன விஷயம்னு தெரிஞ்சுக்க, அவங்க உரையாடலை காது கொடுத்து கேட்டேன்.
வால்பாறை நகராட்சியில, பல கோடி ரூபா மதிப்புல வளர்ச்சிப்பணிகள் நடக்குது. ஆனா, எந்த வேலையும் உருப்படியா நடக்கறதில்லை. 'கமிஷன்' வசூல்ல மட்டுமே குறிக்கோளா அதிகாரிகள் இருக்காங்க. வளர்ச்சிப்பணிகள் தரமா இருக்கானு யாருமே எட்டிக்கூட பார்க்கறதே கிடையாது.
அதிகாரிகளோட தில்லுமுல்லு வேலைய, கவுன்சில் கூட்டத்திலேயே டாரு டாரா கிழிச்சு தொங்க விட்டுட்டாங்க. அதிகாரிகள் ஆய்வுக்கு போகாததால, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரும் கடமைக்கு வேலை செஞ்சுட்டு, பணத்தை வாங்கிட்டு போறாரு.
இதுபத்தி புகார் கிளம்புனதும், இரு அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்வது போல பாவ்லா காட்டிட்டு வந்துட்டாங்க. எல்லா வேலையும் நல்லா இருக்குனு 'வெரிகுட்' சர்டிபிகேட் கொடுத்துட்டாங்க. எல்லா மட்டத்திலும் பணம் பாய்வதால், நகராட்சி வேலை எல்லாமே இப்படித்தான் இருக்கும்னு, பேசிக்கிட்டாங்க.
எலக் ஷன் ஹீரோக்கள் ஆக் ஷன்!
உடுமலை ஒன்றிய அலுவலகத்துல 'பைக்'ய நிறுத்திட்டு, செய்தி சேகரிக்க கிளம்பினேன். அங்க இருந்த ரெண்டு அதிகாரிகள், தேர்தல் வரப்போகுதுனு பேசிக்கிட்டு இருந்தாங்க. ஊரக உள்ளாட்சி தேர்தல் பத்தி ஏதோ பேசறாங்கனு கவனிச்சேன்.
உடுமலை ஒன்றியத்துல, திடீர் போராட்டகாரங்க முளைச்சிருக்காங்க. இவங்க, ஏதாவது ஒரு பிரச்னைய கையில எடுத்து போராட்டம் நடத்துவோம்னு மனு கொடுக்க துவங்கிட்டாங்க.
ஒன்றியத்துல இருக்கும் சுகாதாரம், குடிநீர் பிரச்னைகள நாமே தீர்த்து வச்சுட்டோம். அந்த பிரச்னைய, சும்மா நாள்ல பேச யாரும் வரமாட்டாங்க.
எலக் ஷன் வரப்போறதால, கிராமத்து மேல திடீர் அக்கறை ஏற்பட்டு, புதுசு புதுசா போராளிகள் முளைச்சுட்டு இருக்காங்க. ஊருக்கு நாலு பேரு கிளம்பி ஆபிசுக்கு வர்றாங்க. இல்லாத பிரச்னைய, இருக்கிறதா சுட்டிக்காட்டி, நாங்க ஆர்ப்பாட்டம் பண்ணுவோம், கலெக்டர் கிட்ட போவோம்னு பேசுறாங்க. எப்படியோ மக்களை குழப்பி, குழம்புன குட்டைல மீன் பிடிக்க போறாங்க. இப்பவே இப்படினா, தேர்தல் நடக்கறதுக்குள்ள இன்னும் என்னென்ன பண்ணுவாங்களோ, என, தேர்தல் நில(கல)வரத்தை சொன்னாங்க.
'சீட்' பிடிச்சா மட்டும் போதுமா?
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி ஆபீஸ்க்கு போயிருந்தேன். உள்ளே இருந்து வந்த ரெண்டு பேர், 'இவங்களுக்கு மாசம் பொறந்தா சம்பளம் வந்துடுது. ஆனா, எந்த வேலையும் செய்யறதே இல்ல,' என, காரசாரமா பேசிட்டு வந்தாங்க.
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சில, செயல் அலுவலர் உட்பட முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் பணியிடங்கள் பல நாட்களாக காலியாகவே இருக்காம். இதனால, சொத்து வரி பேரு மாற்றம், புதுசா வீடு கட்டுறதுக்கு அனுமதி, புதிய வீட்டுக்கு வரி போடுறது, வரி வசூல் எல்லா பணியும் முடங்கி கிடக்குது.
எந்த வேலைக்கு, பேரூராட்சி ஆபீஸ் வந்தாலும், அதிகாரிக யாரும் இல்லைனு திருப்பி அனுப்புறாங்க. எப்ப வந்தாலும், 'இன்று போய் நாளை வா' கதையா இருக்கு.
ஊருக்குள்ளேயும் எந்த வேலையும் நடக்கறதில்ல. புதுசா எந்த வேலைக்கும் நிதியும் ஒதுக்கலனு கவுன்சிலர்களும் புலம்பறாங்க. தலைவர் 'சீட்' பிடிக்க மட்டும் போட்டி போட்டாங்க. இப்ப, மக்கள் பணி செய்ய யாருமே இல்லை. இதுக்கெல்லாம், 'விடியல்' பிறக்குமானு தெரியல, என, அவங்க பேசிக்கிட்டாங்க.
மக்கள பத்தி இவங்களுக்கு கவலையில்ல!
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், காங்., கட்சி சார்பில், லோக்சபாவில், எம்.பி., ராகுல் குறித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்கு சென்றிருந்த போது, 'இதெல்லாம் நியாயமுங்களா' என, நண்பர் ஒருவர் நக்கலாக கேட்டார்.மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.,- கம்யூ., கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க. பா.ஜ., -- த.மா.கா., கட்சிக்காறங்க, சப் - கலெக்டர் கிட்ட மனு கொடுத்து, மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தினாங்க.
ஆனா, காங்., கட்சிக்காரங்க, மத்திய பட்ஜெட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க. இப்போ, எம்.பி., ராகுல் குறித்து பேசினதுக்கு ஆர்பாட்டம் நடத்துறாங்க. இவங்களுக்கு, மின்கட்டண உயர்வால, பொதுஜனங்க பாதிக்கறது பத்தி கவலையே இல்லையா, அத பத்தி மட்டும் வாய்திறக்க மாட்டேங்குறாங்க.
கூட்டணி கட்சிக்கு ஆதரவா இருக்கலாம். அதுக்காக, மக்கள மறந்துட்டு, இப்படி இருந்தாங்கனா, நாளைக்கு இவங்கள மக்களும் மறந்துடுவாங்க. இவங்களுக்கு மக்கள பத்தி கவலையே இல்லை, ஆளுங்கட்சி முதுகுல ஏறி, ஓட்டுக்கு நோட்டு கொடுத்து ஜெயிச்சுடலாம்னு முடிவுக்கு வந்துட்டாங்க போலிருக்குனு பேசிக்கிட்டாங்க.
ஆளுங்கட்சிக்கு பாக்கெட் நிரம்புது
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்கு நண்பரை 'டிராப்' செய்ய சென்றிருந்தேன். அப்போது, கனிமவளம் 'ஓவர் லோடு' ஏற்றிய டிப்பர் லாரி வேகமாக சென்றது.
அதைக்கண்ட நண்பர், கனிமவளத்தை கேரளாவுக்கு எவ்வளவு தைரியமா கொண்டு போறாங்க பார்த்தியா, இதுக்கெல்லாம் ஆளுங்கட்சி சப்போர்ட் தான் காரணம். ஒவ்வொரு குவாரில இருந்து லோடு எடுத்துட்டு போகும் லாரிக்கு, ஒவ்வொரு டிரிப்புக்கும் தனித்தனியா 'பாஸ்' கொடுக்கறாங்க.
ஆளுங்கட்சி தரப்புல கொடுக்கற இந்த பாஸ் இருந்தா போதும், வழியில யாரும் 'செக்' பண்ண மாட்டாங்க, 'ஓவர் லோடு' கேஸ் போட மாட்டாங்க. ரெண்டு யூனிட்டுக்கு பாஸ் கொடுத்திருப்பாங்க, ஆனா, லாரியில எட்டு யூனிட் லோடு ஏத்தியிருப்பாங்க.
இதுனால, ஆளுங்கட்சிக்காரங்க பாக்கெட் நிரம்புது. அரசாங்கத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுது. இதுமட்டுமா, ஒவ்வொரு டிரிப்புக்கும் தனித்தனியான பாஸ் போடுறது கிடையாது. ஒரே பாஸ் கொடுத்து, ஒரு நாள் முழுவதும் ஓட்டுறாங்க. இப்படி இருந்தா அரசுக்கு எப்படி வருமானம் வரும். இத யாராவது தட்டிக்கேட்டா, ஆளுங்கட்சி தரப்புல இருந்து மிரட்டல் தான் வருது. இதுக்கெல்லாம், முடிவு கட்டினா தான், இயற்கையை பாதுகாக்க முடியும். ஆனா, இதை யாரு பண்ணுவாங்க, என, ஆதங்கத்தை கொட்டினான்.