ADDED : செப் 02, 2024 02:04 AM
திருப்பூர் மாவட்டத்துக்கு ஒரு ராசி இருக்கு!
உடுமலையில்,அரசுப்பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். அப்போது ஆசிரியர்கள் இருவர் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும், ஒவ்வொரு ராசி இருக்கும்னு சொல்றாங்க. நம்ம திருப்பூருக்கும் ஒரு ராசி இருக்குபோல, என ஒருவர் பேசத்துவங்கினார். 'என்னப்பா சொல்ற' என மற்றொருவர் வினாவினார்.
'அட நம்ம கல்வித்துறையில தான், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணி நிறைவு பெறும்போது, அவங்களா இந்த மாவட்டத்த கேட்டு வர்ராங்கலா, இல்ல... தானா அமையுதானு தெரியல. ஆனா, வர்றவங்கல்லாம் முழுசா மூணு வருசம் கூட இருக்கிறதில்ல.
அதிகபட்சம் ரெண்டு வருசத்துக்குள்ளையே பணி நிறைவாகி போயிடுறாங்க. அப்புறம், ஒரு ரெண்டு, மூணு மாசம் பொறுப்பு சி.இ.ஓ., மறுபடியும் ஒரு வருஷத்துல பணி நிறைவு பெறும் சி.இ.ஓ.,வாக போடுறாங்கப்பா,' என்றார்.
அட... ஆமாம்ல, இப்ப இருக்கிறவர் கூட அதே கண்டிசன்ல தான் இருக்காரு. இங்க மட்டுமில்லப்பா தொண்ணுாறு சதவீத மாவட்டங்கள்ல இதுதான் நிலைமை.
இதனால வர்ரவங்க எல்லாம் 'ஓவர் ரிஸ்க்' உடம்புக்கு ஆகாதுனு அமைதியாக பணிய நிறைவு செய்யத்தான் பார்க்குறாங்க, என்றார். திருப்பூர் கல்வி மாவட்டத்துக்கு இப்படி ஒரு ராசி இருக்கானு யோசிச்சுட்டே நானும் கிளம்பினேன்.
புதுசா, புதுசா திறக்கறாங்க 'பார்'
'ஏற்கனவே 24 மணி நேரமும் மதுபானம் விற்கறாங்க. மெயின் ரோட்டுல போகவே முடியல; இதுல புதுசா ஒரு கடை வேற திறக்க போறாங்களாம்,' என விவசாயிகள் குறிச்சிக்கோட்டை நால்ரோட்டில் புலம்பி கொண்டிருந்தனர்.
அதில் ஒருவர், 'நம்மூருக்கு பக்கத்துல இருக்கற 'டாஸ்மாக்' கடையில, காலங்காத்தாலேயே மதுபாட்டில் விக்கறாங்க. இதனால, மூணாறு ரோட்டுல போகவே முடியல. 'குடி'மகன்களால், தினமும் வாகன விபத்து நடக்குது. அந்த ஏரியாவுல ஏதாவது பிரச்னை நடந்துட்டே இருக்கு.
'ஏனுங்க இதெல்லாம் எல்லா பக்கமும் நடக்கறதுதான். நாம தான் கண்டுக்காம நம்ம வேலைய பார்த்துட்டு, ஓரமா ஒதுங்கி போகணும்,' என்றார்.
அதுக்கு மற்றவர், 'அட இதெல்லாம் பழகி போச்சுங்க; ஆனா, அடுத்ததா அதே ஏரியாவுல, புதுசா ஒரு 'பார்' கொண்டு வர போறாங்களாம். அதையும் திறந்துட்டா இந்த ஏரியாவுல யாரும் நடக்கக்கூட முடியாது. ஏகப்பட்ட இடத்துல பெட்டிஷன் கொடுத்தாச்சு. ஆனா ஒன்னும் நடக்கல.
'அதெல்லாம சரி புதுசு, புதுசா பல பெயருல 'பார்' திறக்க எப்படிதான் அனுமதி கொடுக்கறாங்கனு தெரியல. போலீசுகாரங்க நம்ம ரோட்டு பக்கமே வர்றது இல்லை. இந்த அக்கப்போர பத்தி பேசி என்ன நடக்க போகுது, நாம போய் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சற வேலைய பார்ப்போம்,' எனக்கூறி அங்கிருந்து கிளம்பினர்.
கூட்டம் இல்லாததால எம்.பி., 'அப்செட்'
வால்பாறைக்கு நன்றி சொல்ல வந்த எம்.பி., கடுப்பாகி போயிட்டாரு, என, டீ கடையில் இருவர் பேசிக்கொண்டனர். என்ன நடந்ததுனு அவங்ககிட்ட விசாரித்தேன்.
வால்பாறை வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல கடந்த வாரம், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி வந்தாருங்க. ஆழியாறு, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், கவர்க்கல், ரொட்டிக்கடை, வால்பாறை நகர் வழியாக பல்வேறு எஸ்டேட் வாக்காளர்களை சந்தித்து நன்றி கூறினாருங்க.
ஆனால, பெரும்பாலான எஸ்டேட்ல விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே கட்சிக்காரங்க இருந்தாங்க. முடீஸ், சோலையாறுடேம், வறட்டுப்பாறை போன்ற இடத்துல, மக்கள் கூட்டமே இல்லாததால, எம்.பி., கடுப்பாயிட்டாருங்க. உடன் சென்ற தி.மு.க., வார்டு செயலாளர்கள கண்ணாபின்னானு திட்டிட்டாருங்க.
வார்டுல எந்த வேலையும் உருப்படியா நடக்கல. ரோடெல்லாம் டஞ்சனா இருக்கு. தெருவிளக்கு கூட ஒழுங்க எரியமாட்டேங்குது. மக்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியல என கவுன்சிலர்களும் ஒரு பக்கம் புலம்பினாங்க.
நாங்க ஜெயிச்சா அப்படி செய்வோம், இப்படி செய்வோம்னு வாய் நிறைய வாக்குறுதி கொடுத்தாங்க. இப்ப வார்டு பக்கம் கூட போக முடியாத நிலையில ஆளுங்கட்சிக்காரங்க இருக்காங்க. அப்புறம் எப்படீங்க கூட்டம் வரும்னு, சொன்னாங்க.
ஏழை குழந்தைக ஸ்கேட்டிங் கத்துக்கலாமா?
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்துல, இரவை பகலாக்கும் வகையில், மின்னொளியில ஸ்கேட்டிங் போட்டி நடந்துச்சு. ஆனா என்ன, நம்ம வரிப்பணத்துல கட்டுன மைதானத்துல, நம்ம குழந்தைக விளையாட முடியாது, என, அலுப்போடு இரு பெண்கள் பேசிக்கிட்டாங்க. புரியும் படி சொல்லுங்க என, கேட்டேன்.
மகாலிங்கபுரம் சமத்தூர் ராமஐய்யங்கார் நகராட்சி பள்ளி மைதான இடத்துல, எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சி நிதி என, பல லட்சம் ரூபா செலவு பண்ணி, ஸ்கேட்டிங் மைதானம் அமைச்சிருக்காங்க.
இந்த மைதானத்துல, மாவட்ட, மாநில மற்றும் தேசிய போட்டியில கலந்துக்கற மாணவ-, மாணவியர் பயிற்சிக்கு வர்றாங்க. ஆனா, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பயிற்சி பெற ஒவ்வொரு மாணவருக்கும் மாதந்தோறும், 2,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கறாங்க.
நம்ம வரிப்பணத்துல கட்டின மைதானத்துல விளையாட, நம்ம குழந்தைகளுக்கு பணம் கேட்குறாங்க. வசூலிக்கற இந்த பணமெல்லாம் யாருக்கு போகுது, ஏதாவது கணக்கு இருக்கானு தெரியல.
விளையாட்டு சங்கத்துக்காறங்க, ஏழை குழந்தைகளும் ஸ்கேட்டிங் கத்துக்கறதுக்கு மனசு வைக்கணும். அதுக்கேற்ப, பயிற்சியாளருக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கணும். இதைய ஒரு சேவையா செஞ்சா, இன்னும் நிறைய குழந்தைகள் வருவாங்க. விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துலயும் இதுக்கு நடவடிக்கை எடுக்கணும், சொன்னாங்க.
ஒன்னுமே புரியல... மர்மமா இருக்குது!
கோட்டூரில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். பேரூராட்சியில் ஒரே பிரச்னையாக இருக்குது. முடிவு இல்லாமல போய்கிட்டே இருக்கு. எல்லாமே மர்மமா இருக்குதுன்னு சொன்னாரு. என்னன்னு கேட்டேன்.
அதற்கு, 'கோட்டூர் பேரூராட்சி தலைவருக்கு எதிரா ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், அ.தி.மு.க., காங்., கட்சி கவுன்சிலர்களும் போர்க்கொடி துாக்கிட்டாங்க. அவங்க தரப்புல, செயல் அலுவலர், தலைவர் யாரையும் மதித்து கருத்து கேட்காம, அவரே முடிவு பண்ணி வேலைய செய்திட்டு, முன்அனுமதி வழங்கப்பட்டது என்ற தீர்மானம் மட்டும் கொண்டு வர்றாரு.
வார்டுல என்ன பணி நடக்குதுனு கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்துறது இல்லை. தீர்மானம் மட்டும் 'பாஸ்' பண்ணுவதற்கு எதற்கு கூட்டம் நடத்துறாங்க. ஊழல் புகார் அதிகமா எழுந்துகிட்டு இருக்கு; இது ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும். இத்தனை நாள், ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்துடக்கூடாதுன்னு பொறுத்து இருந்தோம். இவங்க செய்யுற வேலையால ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்துடுமோன்னு அச்சத்துல தான் போராடுறோம்னு கவுன்சிலர்கள் சொல்லறாங்க.
தலைவர் தரப்பிலோ, 'இவங்க புகார் சொல்லுறதல எந்த முகாந்திரமும் இல்ல; தீர்மானம் கொண்டு வந்த போதே எதிர்ப்பு தெரிவிச்சு நிறுத்தி இருக்கலாமேனு,' சொல்றாரு.
எது, எப்படியோ, ரெண்டு தரப்பிலும் களம் இறங்கிட்டாங்க. ஒரு முடிவு வந்தாத்தான் ஊருக்கு நல்லது நடக்கும், என்றார்.
எங்க பார்த்தாலும் இதே நிலைமை தான். ஆளுங்கட்சியினரிடையே இந்த புகைச்சல் ஓய மாட்டேங்குது என, நினைத்தபடியே நானும் கிளம்பினேன்.
ஆபீஸ் மட்டும் திறந்த போதுமா!
உடுமலை வ.உ.சி., வீதியில், சென்று கொண்டிருந்தேன். அவ்வழியே வந்தவர், எம்.பி., ஆபீஸ் எங்கேங்க இருக்கு, மனு கொடுக்கணும், என்றார்.
நாமும் தேடிப்பார்த்த நிலையில், அலுவலகம் பூட்டப்பட்ட நிலையில், அலுவலக போர்டும், காம்பவுண்டிற்கு கீழே விழுந்து காணப்பட்டது. எம்.பி., ஆபீஸ் என்னாச்சுனு விசாரிச்சேன்.
பொள்ளாச்சியில வெற்றி பெற்றதும், சட்டசபை தொகுதிகள் வாரியாக, ஆபீஸ் திறப்பேன்னு எம்.பி., ஈஸ்வரசாமி அறிவிச்சாரு. உடுமலை நகராட்சியில் அலுவலகம் கேட்க, நகராட்சியும், வ.உ.சி, வீதியில், நேரு வீதி சந்திப்பு பகுதியில் இருந்த, வேறு திட்டத்திற்காக கட்டப்பட்ட கட்டடத்தை, பழுது பார்த்து, புதிதாக பெயிண்ட் அடித்து கொடுத்தாங்க.
கடந்த, 18ம் தேதி, அமைச்சர், மாவட்ட செயலாளர், கட்சி நிர்வாகிகள் சூழ ஆபீஸ் திறக்கப்பட்டது. ஆனா, பணியாளர்கள நியமிக்காம, ஆபீஸ் ரெண்டு வாரமாக பூட்டியே கிடக்குது. மத்திய அரசு லட்சினையுடன் இருந்த போர்டும், காற்றுக்கு கழன்று, காம்பவுண்டிற்குள் கீழே விழுந்திருச்சு. ஆபீஸ் திறந்தா மட்டும் போதாது, அதற்கான அலுவலர்கள நியமித்து, மனுக்கள் பெறுவதோடு, குறிப்பிட்ட நாட்களில் மக்களையும் சந்திக்கணும். இதையெல்லாம் அவரு கிட்ட யாரு சொல்லறதுனு, ஆளுங்கட்சிக்காரங்க எஸ்கேப் ஆயிட்டாங்க.