ADDED : பிப் 10, 2025 05:42 AM
கவரிங் நகைய கணக்குல சேர்க்கறாங்க!
பொள்ளாச்சி மரப்பேட்டை அருகே, ரிட்டையர்டு போலீஸ் நண்பருடன் நடந்து சென்றேன். அவரு சொன்னது ஆச்சரியமாக இருந்துச்சு.
இப்பெல்லாம் நகை திருட்டு நடந்தா அதிகமா போயிடுச்சுன்னு கணக்கு காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அதுலயும், ஒரு கிராம் கோல்டு கவரிங் நகைகளையும் கணக்குல சேர்த்து, நகை கணக்காக கொடுக்கறாங்களாம். அதிகளவு நகை திருட்டு போயிருச்சுனா, போலீசார் தனிப்படை அமைத்து தேடுவாங்க, சீக்கரமா கண்டுபிடிச்சு கொடுத்திடுவாங்கனு நினைக்குறாங்க.
சமீபத்துல, அதிகளவு நகை திருட்டு நடந்து இருக்கு. இதை கண்டுபிடிக்க போலீசாரும் தீவிரமாக வேலை பார்த்தாங்க. திருடர்கள கண்டுபிடிச்சு நகைய பறிமுதல் பண்ணியிருக்காங்க. அதுல பார்த்தப்ப, 40 பவுனுக்கு, ஒரு கிராம் கவரிங் நகைகளா இருந்திருக்கு. அதுல, கவரிங், தங்கம் என எதையும் வெளிப்படுத்தாம, பிடிச்சாச்சுனு மட்டும் சொல்லிட்டு போயிட்டாங்க.
வீட்டுக்காறங்க உண்மைய சொன்னா நல்லா இருக்கும்; கஷ்டபட்டு குற்றவாளிய தேடிப்பிடிச்சா, கடைசியில இதுபோல நடப்பது கொஞ்சம் யோசிக்க வைக்குது. திருடங்க நகைய மாத்திட்டாங்களானு 'நல்லா' விசாரிச்சா, 'அங்க என்ன எடுத்தோமோ, அது தான் இதுனு,' சொல்லியிருக்காங்க.
திருட்டு நடந்தா, போலீஸ்ல உண்மைய சொல்லணும். நகை கணக்கு காட்டுறதும் உண்மையா இருக்கணும். ஒரு கிராம் கவரிங் நகைய கணக்குல காட்டுறது நல்லதுக்கு இல்லைனு, சொன்னார்.
கமிஷனுக்காக பறக்கும் ஆம்புலன்ஸ்கள்
பொள்ளாச்சி, காந்தி சிலை அருகே பேக்கரியில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். ஆம்புலன்ஸ்கள் வேகமாக போனத பார்த்து, எல்லா வாகனங்களும் வழி விட்டு ஒதுங்கின. இதை கண்ட நண்பர், உயிர் காக்கும் ஆம்புலன்ஸ், இப்போ கரன்சி பார்க்கும் ஆம்புலன்ஸ் ஆகிவிட்டதுனு, புலம்பினார்.
என்னவென்று விசாரித்தேன். எந்த நோயாளியாக இருந்தாலும், '108' ஆம்புலன்சில் ஏற்றியதும், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குத் தான் அழைச்சிட்டு போகணும். அருகில் அரசு மருத்துவமனை இல்லைனா மட்டும் தான், தனியார் மருத்துவமனைகளுக்கு போகணும். ஆனா, அப்படி நடக்கறதில்ல.
இது ஒருபுறமிருக்க, '108' ஆம்புலன்ஸ் இயக்கத்துக்கு போட்டியா, தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் பறக்கின்றன. விபத்துல காயமடைந்தவர்கள தனியார் மருத்துவமனைக்கு அழைச்சுட்டு போனா, அவங்களுக்கு, ஐந்தாயிரம் ரூபா வரைக்கும் கமிஷன் கொடுக்கறாங்க. அதனால தான், சின்ன விபத்தா இருந்தாலும் இத்தனை ஆம்புலன்ஸ் போட்டி போட்டுட்டு போகுது.
அதே மாதிரி, அரசு மருத்துவமனை வளாகத்திலேயே சிலர் புரோக்கர்களாகவும் வலம் வர்றாங்க. எலும்பு முறிவு நோயாளிகளை குறிவைக்கும் இவர்கள், பிரெயின்வாஷ் செய்து, தனியார் மருத்துவமனைக்கு அனுப்புறாங்க. அதுக்கு, கணிசமான தொகை கமிஷனா வாங்குறாங்க. எப்படியோ, அவங்க வருமானத்துக்கு மக்களோட உயிரோடு விளையாடுறாங்க. இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கணும்னு, சொன்னாரு.
தண்ணிய திறந்தா பாக்கெட் நிரம்புது
தாராபுரம் வரை சென்று கொண்டிருந்த போது, வெயிலுக்கு ரங்கசமுத்திரம் வாய்க்கால் பக்கம் ஒதுங்கினோம். அங்கு இரு விவசாயிகள் பேசிக்கொண்டதில் இருந்து...
மழை காலம் முடிஞ்சு வெயில் காலத்துல, திருமூர்த்தி டேம்ல இருந்து தண்ணீ திறந்திருக்காங்க. பாசனம் துவங்கியதும், நம்ம வாய்க்கால்ல அதிக தண்ணீரை திறந்து விட்டு, பல இடத்துல வீணா போச்சு. மடைகளையும் சரியா பராமரிக்காம விட்டுட்டாங்க. இது பத்தி, அதிகாரிக கிட்ட புகார் சொல்லியும் கண்டுக்கல.
அதுக்கு காரணம், வாய்க்கால் வழியோரத்துல ஆயக்கட்டுல இல்லாதவங்களும், சில கம்பெனிகாரங்களும் தண்ணீர் எடுத்துக்க சாதகமா இந்த வேலையை பார்க்கறாங்க. இதனால, நெறய பேர் பாக்கெட் நெரம்புது.
ஒரு வழியாக விவசாய சங்கத்துக்காரங்க நேரடியாக வாய்க்கால்ல பார்த்துட்டு பொதுப்பணித்துறை மேல் அதிகாரிங்கிட்ட போராட்டம் பண்ண போறோம்னு சொன்னதுக்கு அப்புறம் நடவடிக்கை எடுத்திருக்காங்க. முதல் சுற்று தண்ணீரிலேயே இப்படி நடந்தா, அடுத்தடுத்த சுற்றுல என்னாகுமோ.
இதுல கடைசியாபாதிக்கறது, நம்மள மாதிரி சின்ன விவசாயிங்கதான். பழைய மாதிரி பாசனம் கிடைக்க, நல்ல அதிகாரிங்கள அரசு நியமிச்சாதான் உண்டு. மெயின் வாய்க்கால்ல இருந்து இந்த பிரச்னை இருக்கு. அதுக்கு மேல புகார் சொன்னா, ஆளுங்கட்சிக்காரங்க இப்படி பண்ணுறாங்க, நாங்க என்ன செய்யறதுனு அதிகாரிகள் தப்பிச்சுக்கிறாங்க, என்ன பண்ணுறதுனு பேசிக்கிட்டாங்க.
உழவர் சந்தை; வியாபாரி சந்தையாயிருச்சு!
உடுமலை உழவர் சந்தைக்கு சென்றிருந்தேன். உழவர் சந்தையில விவசாயிகள் தான் விளைபொருட்களை விற்கணும், ஆனா, இங்க வியாபாரிகளோட ஆதிக்கமா இருக்குனு, விவசாயிகள் சிலர் ஆதங்கப்பட்டனர். அவர்களிடம் விசாரித்தேன்.
விவசாயிகள் 180க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருக்கோம். ஆனா, உழவர் சந்தையில, உண்மையான விவசாயிகளை விட, வியாபாரிகள் ஆதிக்கம் தான் அதிகமாயிருக்கு. காய்கறிகளுக்கு அதிகாரிகள் விலை நிர்ணயித்தாலும், வியாபாரிக கொள்முதல் செய்த தொகையிலிருந்து, லாபம் வைத்து, காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்கறாங்க.
ஊட்டி டீத்துாள் விற்க அனுமதி பெற்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பெயருல, கண்ணமநாயக்கனுாரில், 17 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்யறதா கூறி, மார்க்கெட்டிலிருந்து காய்கறிகள வாங்கிட்டு வந்து விற்கறாங்க.
புகார் செய்ததும், அந்த நபர் கடை அமைக்க, அதிகாரிக தடை விதிச்சாங்க. ஆளும்கட்சி செல்வாக்கு இருக்கறதால, அதிகாரிகள மிரட்டி மீண்டும் கடை போட்டுட்டாரு. உழவர் சந்தை அதிகாரிகளையும், விவசாயிகளையும் மிரட்டுறாரு. தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த உழவர் சந்தை, தற்போது வியாபாரிகள் சந்தையா மாறியிருக்கு.
போலீசுக்கே தண்ணி காட்டுறாங்க!
வடசித்தூரில் நண்பர் வீட்டு விஷேசத்துக்கு போயிருந்தேன். அங்கிருந்த இருவர், டாஸ்மாக் மதுபாட்டிலை இடத்தை மாத்தி வச்சு விக்கறாங்குனு பேசிக்கிட்டு இருந்தாங்க. காது கொடுத்து கேட்டேன்.
நெகமம் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டுக்கு உட்பட்ட சமத்துவபுரம் பக்கத்துல, டாஸ்மாக் மதுக்கடை இருக்கு. இங்க காலை நேரத்திலிருந்து 'சரக்கு' விற்கறாங்க. இத கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்யறாங்க.
இந்த ஊரு நெகமம், கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் எல்லையா இருக்கறதால, 'சரக்கு' விக்கறவங்க போலீசுக்கே தண்ணீர் காட்டுறாங்க. நெகமம் போலீஸ் வர்றப்ப, கிணத்துக்கடவு லிமிட்டுக்குள்ள 'சரக்கு' பதுக்கி விக்கறாங்க. கிணத்துக்கடவு போலீஸ் வர்றப்ப, நெகமம் லிமிட்டுக்குள்ள ஓடி போயிடுறாங்க.
ரெண்டு ஸ்டேஷன் போலீசாரும் தினமும் இந்த ஊருக்கு வந்துட்டு, வெறும் கையோடு திரும்பி போறாங்க. போலீஸ் கண்டுக்காம விட்டுட்டாங்கனா, 'சரக்கு' விற்கறத கட்டுப்படுத்த முடியாது. இதுக்கு, ரெண்டு ஸ்டேஷன் போலீசும் சொல்லி வச்ச மாதிரி ஒரே நேரத்துல ரெய்டு பண்ணினா தான், 'சரக்கு' விற்கற ஆசாமிக சிக்குவாங்கனு, பேசிக்கிட்டாங்க.

