ADDED : பிப் 24, 2025 12:24 AM
அரசு பள்ளிக்கு உதவி செய்யஓராயிரம் நடைமுறை இருக்கு!
உடுமலையில், அரசு பள்ளி ஆண்டுவிழாவில் பங்கேற்ற போது, தங்களின் பள்ளிக்கென தன்னார்வலர்கள் செய்யும் நலத்திட்டங்கள், கல்வித்துறையால் பாதிக்கப்பட்டுவிட்டதாக ஆசிரியர்கள் புகார் கூறிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்தேன்.
முன்னெல்லாம் அரசுப்பள்ளிக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் கிட்ட கேட்டு நேரடியாக வாங்கிட்டு இருந்தோம். அவங்களும் ஆர்வமா செஞ்சிட்டு இருந்தாங்க.
ஆனா, கல்வித்துறை அதுக்கும் ஒரு பதிவு செய்யணும்னு, புதுசா ஒரு நடைமுறை கொண்டு வந்ததால, உதவி கிடைக்கிறதுலயும் சிக்கல் ஏற்பட்டிருக்கு.
உதவி செய்ய வரவங்க முதல்ல, கல்வித்துறையோட 'நம்ம ஸ்கூல் நம்ம பள்ளி செயலியில்' அரசு பள்ளிக்கென எந்த உதவி செய்தாலும், பதிவு செய்யணும். அதுக்கு கல்வித்துறை அனுமதி அளிச்சதுக்கு அப்புறம் தான், உதவி செய்யணும்னு நடைமுறை கொண்டுவந்தாங்க.
ஆனா, ஒரு உதவி செய்யறதுக்கு, ஓராயிரம் நடைமுறையானு பெரும்பாலானவங்களுக்கு இது செட் ஆகல. நேரடியா செய்யலாம்னு முன்வந்தா, அந்த உதவிய வாங்க ஆசிரியர்கள் தயங்குறாங்க. இப்படி பண்ணுனா, அரசு பள்ளிகளுக்கு உதவி செஞ்சுகிட்டு இருக்கறவங்களும் குறைஞ்சுடுவாங்கனு, சொன்னாங்க.
புதுசா முளைக்குது கடைங்க...அதிகாரிங்க கண்ணுல திரைங்க!
உடுமலை டவுனுக்குள்ள புதுசா, புதுசா ரோட்டோர கடைக முளைக்குது, இப்படியே போனா, பைக்க தள்ளிட்டுதான் போகணும் போல, என, உழவர் சந்தை ரோட்டில், இருவர் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தனர். அவங்க உரையாடல் இதோ...
உழவர் சந்தைக்கு முன்னாடி கடை போடறது, காலங்காலமா நடந்துட்டு இருக்கு. இப்ப புதுசா ராமசாமி நகர் ரயில்வே கேட் தாண்டுனதும், புதுசா ஒரு சந்தையே உருவாயிருச்சு. முதல்ல காய்கறி மட்டும் வித்துட்டு இருந்தாங்க.
இப்ப பல கடைங்க வந்துருச்சு. சாயங்கால நேரம் அந்த ரோட்டுலேயே போக முடியல. இதபத்தி புகார் கொடுத்தாலும், யாரும் நடவடிக்கை எடுக்கறது இல்லை.
அதே மாதிரி, திருப்பூர் ரோட்டுல வாரத்துல ஒரு நாள், ரோட்டோரத்துல காய்கறி கடை போடறாங்க. கடைக்கு வர்றவங்க வாகனங்களை ரோட்டுலேயே நிறுத்துறாங்க.
இந்த கடைங்க போடறதுக்கு, யார் யாருக்கு வருமானம் போகுது; யார் சப்போர்ட்ல பண்றாங்கன்னு தெரியல.
அரசியல்வாதிங்கள விடுங்க, இந்த அதிகாரிங்க கண்ணுக்கு மக்கள் படற கஷ்டம் தெரியவே தெரியாதா. சரி அவங்களுக்கும் இதுல ஏதோ ஆதாயம் இருக்கும் போல.
அந்த பக்கம் போகும் போது மட்டும் கண்ணுக்கு திரை போட்டுக்குவாங்க போல. இப்படியே போனா, ரோட்டுல நடக்கக்கூட இடமிருக்காது என்றபடியே, அங்கிருந்து அவர்கள் நகர்ந்தனர்.
மலையேறி வந்த கலெக்டருமக்களோட மனமறியாம போனாரு!
வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நடந்த, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமில் பங்கேற்ற பொதுமக்கள், பேக்கரியில் நிகழ்ச்சியை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சை காதுகொடுத்து கேட்டேன்.
மாவட்டத்துக்கு புதுசா வந்திருக்கற கலெக்டர் பவன்குமார் முகாமுக்கு வந்திருந்தார். நகராட்சித் தலைவர், அரசுத்துறை அதிகாரிகள் எல்லாரும் இருந்தாங்க. விழா துவங்கறதுக்கு முன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை.
மைக்கை பிடித்த கலெக்டர் ஆய்வு செய்ய அனைவரும் தயாரா இருக்கீங்களா, மக்களின் பிரச்னைகள நேரடியா கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம்னு, பேசினார். உடனே கூட்டத்தை முடித்து, கலெக்டர் ஆய்வுக்காக சென்றார்.
சாயங்காலம் ஆய்வு குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்துச்சு. அந்த கூட்டத்துக்கு யாரையுமே உள்ள விடுல. உள்ளே என்ன நடந்துச்சுனு தெரியல. கூட்டம் நடந்ததும், கலெக்டர் கோவைக்கு கிளம்பிட்டாரு.
கலெக்டர் வந்திருக்காரு, பிரச்னைகளுக்கு ஏதாவது தீர்வு கிடைக்கும்னு காத்திருந்த மக்கள் ஏமாற்றத்தோடு திரும்பினாங்க. அரசு விழாவுல, காலையில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி முடியும் போது தேசியகீதமும் ஒளிக்கலனு, அதிருப்தியா பேசிக்கிட்டாங்க.
வீடு கட்ட இடம் பிடிக்க திரண்டாங்கஊருக்குள்ள இருக்க நிலம் தெரியல!
திருமூர்த்தி மலையடிவாரத்துல, வன எல்லை அருகே, கல்லாங்குத்து காட்டில், பொதுமக்களுக்கு வீட்டுமனை வழங்கறாங்கனு பரவிய வதந்தியால், பல்வேறு கிராமத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுக்கு வீடு கட்ட இடம் பிடிக்க திரண்டுட்டாங்க. அந்த இடமே பரபரப்பாயிருச்சு.
அங்க செய்தி சேகரிக்க போயிருந்த போது, அரசியல் அனுபவம் மிக்க பெரியவர்கள் இருவர், இலவச பட்டா கொடுக்கறது பற்றி பேசிக்கிட்டு இருந்தாங்க. அவர்களின் பேச்சை கவனித்தேன்.
ஆபத்தான காண்டூர் கால்வாய், வன விலங்குகள் அதிகம் இருக்கற இடத்துல, மக்களை குடியமர்த்துவதால், வனச்சூழல் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தாயிரும். இந்த பகுதிய தேர்வு செய்வதற்கு பதிலா, ஆக்கிரமிப்புகளை மீட்டால் போதும்.
தளி பேரூராட்சில, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறைக்கு சொந்தமாக, 70 ஏக்கர் நிலத்த ஆக்கிரமிச்சு, தென்னந்தோப்பு, விவசாய நிலமா மாற்றியிருக்காங்க. அந்த இடமெல்லாம், போக்குவரத்து வசதியோடும், வனவிலங்குகள் பாதிப்பு இல்லாத பகுதியாகவும் இருக்கு.
அதிகாரிக ஆய்வு செய்து, அரசுக்கு சொந்தமான நிலத்த மீட்டால், ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீட்டு மனை வழங்க முடியும். ஆனா, அதிகாரிக ஆக்கிரமிப்பு குறித்து கண்டுக்காம இருக்காங்கனு, பேசிக்கிட்டாங்க.
புது மொந்தைல பழைய கள்ளுகட்சி மாறுவோர் புது ட்ரெண்டு!
கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு நண்பரைச் சந்திக்க சென்றேன். அங்கு சிலர், த.வெ.க., கட்சிய பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க.
நல்லட்டிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவரின் கணவர், தி.மு.க.,வுல இருந்தாரு. சில நாளுக்கு முன்னாடி, யூனியன் ஆபீஸ்ல ஊராட்சி தலைவர்கள் பதவிக்காலம் முடிஞ்சதும் கூட்டம் போட்டாங்க.
கூட்டத்துல, யூனியன் ஆபீஸ்ல இருக்க அதிகாரிக, ஊராட்சி அலுவலருக, தி.மு.க., கட்சிக்காரங்க எல்லாரும் வந்தாங்க. நல்லட்டிபாளையம் ஊராட்சித் தலைவரின் கணவரும் வந்திருந்தாரு.
அவரு, கூட்டத்துல பேச வரும் போது, அங்கிருந்த தி.மு.க., கட்சியைச் சேர்ந்த முக்கிய பொறுப்பில் இருக்கறவங்க, 'நீங்கள் பேச வேண்டாம்' எனக் கூறி உட்கார வச்சுட்டாங்க. என்ன காரணம்னு கேட்டா, எம்.பி., எலெக்சன் அப்போ இவரு கட்சி எதிர்பார்த்த அளவுக்கு வேலை செய்யல, அதனால இவரை கட்சியில ஓரங்கட்டி உட்கார வச்சுட்டாங்கன்னு தெரிஞ்சுது.
அந்த மீட்டிங்கில் நடந்த விஷயத்த, வாட்ஸ்அப்ல வாய்ஸ் நோட் ரெக்கார்ட் பண்ணி எல்லாத்துக்கும் அனுப்பிச்சிட்டார். அதே கோவத்தோட போய், த.வெ.க.,வுல சேர்ந்துட்டாரு. அப்ப, புது மொந்தைல பழைய கள்ளு தான்னு, பேசிக்கிட்டாங்க.
மாட்டு ஆஸ்பத்திரியில ஆளில்லவெட்னரி டாக்டரு எங்க போகறாரு?
பொள்ளாச்சி ராஜாமில் ரோடுல, செல்லப்பிராணிகள அழைச்சுட்டு, 'இப்படி இருந்தா என்ன பண்ணுறதுனு,' ரெண்டு பேர் பேசிக்கிட்டு போனாங்க. என்ன விஷயம்னு அவுங்க கிட்ட விசாரிச்சேன்.
கால்நடை மருத்துவமனையில, கால்நடை உதவி இயக்குனர் அலுவலகமும் செயல்படுது. பொள்ளாச்சி டவுன் மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்த சேர்ந்தவங்க, அதிகப்படியான கால்நடைகள இங்க சிகிச்சைக்கு அழைச்சுட்டு வர்றாங்க.
தினமும், காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரைக்கும், மாலை, 3:00 மணி முதல், 5:00 மணி வரைக்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கறாங்க. மருத்துவமனையில, கால்நடை உதவியாளர்கள் பற்றாக்குறை இருக்கு.
அஞ்சு பேரு இருக்க வேண்டிய இடத்தில், ஒருத்தரு மட்டுமே இருக்காரு. ஆனா, பணியில இருக்க வேண்டிய டாக்டரு எப்போதுமே மருத்துவமனையில இருக்கறதில்ல, கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சை, உரிய மாத்திரை, மருந்துகள பெற முடியல. அதனால, தனியார் கால்நடை மருத்துவமனைக்கு போக வேண்டிருக்குனு, சொன்னாங்க.

