/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தை தனியாக செயல்படுத்த மாநிலங்கள் கோரிக்கை
/
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தை தனியாக செயல்படுத்த மாநிலங்கள் கோரிக்கை
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தை தனியாக செயல்படுத்த மாநிலங்கள் கோரிக்கை
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தை தனியாக செயல்படுத்த மாநிலங்கள் கோரிக்கை
ADDED : ஆக 25, 2024 01:31 AM
கோவை;தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய ஆறு மாநிலங்களில், வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டம் (எஸ்.எம்.ஏ.எம்.,) செயல்படுத்தப்படும் விதம் குறித்த, பிராந்திய அளவிலான ஆய்வுக் கூட்டம், கோவை வேளாண் பல்கலையில் நடந்தது.
மத்திய அரசின் வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின், இயந்திர மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு சார்பில், இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இரண்டு நாள் ஆய்வுக்கூட்டத்தைத் துவக்கி வைத்த, மத்திய வேளாண் துறை இணைச் செயலாளர் ருக்மணி பேசுகையில், “குறு, சிறு விவசாயிகளால், விலையுயர்ந்த வேளாண் இயந்திரங்களை வாங்கிப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில், வாடகை இயந்திர மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்,” என்றார்.
தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முருகேசன் பேசும்போது, ''சென்னையில் உள்ள மாநில வேளாண் இயந்திரங்கள் தரவு மையத்தை, மாநில அதிகாரிகள் பார்வையிட வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு பல்வேறு வகையான இயந்திரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம், மத்திய அரசின் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா (ஆர்.கே.வி.ஒய்.,) திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுகிறது. இதனை, தனி திட்டமாக செயல்படுத்த வேண்டும் என, மாநில அரசின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
கூட்டத்தில், மாநில அரசு பிரதிநிதிகள், வேளாண் மற்றும் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

