ரேஷன் கடைகளுக்கான பொருட்களை சரியான எடையில் வழங்க கோரிக்கை
ரேஷன் கடைகளுக்கான பொருட்களை சரியான எடையில் வழங்க கோரிக்கை
ADDED : மே 17, 2026 04:00 PM
கிணத்துக்கடவு: ரேஷன் கடைகளுக்கான பொருட்களை, நுகர்பொருள் வாணிபக்கழகத்திலிருந்து சரியான எடையில் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தபட்டுள்ளது.
தமிழகத்தில் பொது வினியோகத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த, ரேஷன் பணியாளர்களுக்கு முறையான ஊதிய உயர்வு மற்றும் சரியான எடையில் ரேஷன் பொருட்கள் கிடைப்பதை தற்போது உள்ள அரசு வலியுறுத்த வேண்டும். இவை உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘ரேஷன் கடைகளுக்கு, நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து வழங்கும் பொருட்கள் சரியான எடை அளவில் வருவதில்லை.
பொருட்களின் எடை குறைவு காரணமாக, ரேஷன் கடைகளில் தவறுகள் நடக்கிறது. எனவே, இனி வரும் நாட்களில் நுகர்பொருள் வாணிப கழகத்திலிருந்து, சரியான எடையில் பொருட்கள் வழங்குவதை அரசு உறுதிபடுத்த வேண்டும். தவறு நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுகுறித்து தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ.,விடம் மனுவும் கொடுக்க உள்ளோம்,’’ என்றார்.
