ADDED : ஜூலை 15, 2026 05:10 PM
கோவை: சிங்காநல்லுார் வீட்டு வசதி வாரிய புதிய கட்டுமானத்துக்கு யு.டி.எஸ்.,ஐ ஒரே ஆவணமாக வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
சிங்காநல்லுார் வீட்டு வசதி வாரிய வீட்டு உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த மறு கட்டமைப்பிற்கான கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கோவை பிரஸ் கிளப்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:
இடிந்த வீடுகளை கட்டித்தருவதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நல்ல நகர்வுகள் உள்ளன. சிலர் அங்குள்ள கோவில் நிலத்தை எடுப்பதற்காக முயற்சிகள் நடப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். அதில் உண்மை இல்லை. 2011ல் வழங்கப்பட்ட கிரைய ஆவணத்தில் பொதுவில் பிரிபடாத பாகம்(யு.டி.எஸ்.,) என்பது காட்டப்படவில்லை.
மறுகட்டமைப்புக்கு யு.டி.எஸ்., உரிமைகள் தேவை. புதிய விதிகளின்படி அனைத்து உரிமைகளும் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பழைய யு.டி.எஸ்., ஐ ரத்து செய்து சங்கத்தின் பேரில் பதிவு செய்தால் பணிகளை துவங்க ஏதுவாக இருக்கும். இது சிறிய சட்ட திருத்தம்தான். அந்த யு.டி.எஸ்.,ஐ அரசு ஒரே ஆவணமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
