/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறிமுதல் செய்த பணத்தை திருப்பிக் கொடுங்க! தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை
/
பறிமுதல் செய்த பணத்தை திருப்பிக் கொடுங்க! தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை
பறிமுதல் செய்த பணத்தை திருப்பிக் கொடுங்க! தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை
பறிமுதல் செய்த பணத்தை திருப்பிக் கொடுங்க! தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை
ADDED : ஏப் 26, 2024 11:57 PM
- நமது நிருபர் -
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்து விட்டதால், கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த தொகைகளை, தேர்தல் ஆணையம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், கோவை மாவட்டத்தில், பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஓட்டுப்பதிவு நாள் வரை நடத்திய சோதனைகளில் பறிமுதல் செய்த தொகைகளில், ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு மட்டும், அத்தொகை விடுவிக்கப்பட்டது.
இன்னும், 62 பேருக்கு, ஒரு கோடியே, 44 லட்சத்து, 82 ஆயிரத்து, 819 ரூபாயை விடுவிக்கவில்லை. இவர்களில் யாரும் அரசியல்வாதிகள் அல்ல; தேர்தல் பயன்பாட்டுக்காக பணத்தை எடுத்துச் செல்லவில்லை. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றதால், பறிமுதல் செய்யப்பட்டது.
ஓட்டுப்பதிவு முடிந்து பல நாட்களாகியும் இன்னும் பணம் விடுவிக்காதது, சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனைகள் வாயிலாக எவ்விதத்திலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை. எவ்வித தயக்கமும் இன்றி, அச்சமும் இன்றி வெளிப்படையாக எளிதாக வீடு வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது. இதுவரை எந்த வேட்பாளரையும் விசாரணைக்கு உட்படுத்தவில்லை.
தேர்தல் ஆணையம் நடத்திய வாகன சோதனைகள் வாயிலாக வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டார்களே தவிர, அரசியல்வாதிகளோ, வேட்பாளர்களோ எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தால், மக்களிடம் இருந்து புகார் வரவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
எந்த புகார் அடிப்படையில், பொதுமக்களின் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன? சாதாரண மக்கள், சிறிய வியாபாரிகள் கொண்டு சென்ற பணம், நகைகளை பறித்து அரசு கருவூலகத்தில் வைத்திருப்பது மிகவும் கொடுமையானது. அன்றாடம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்துக்கு ஏழை மக்களால் ஆதாரம் காட்ட முடியாது.
பொதுமக்களிடம் கைப்பற்றிய பணம் ஓட்டுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்டதாக தேர்தல் ஆணையம் நம்பினால், எந்த வேட்பாளருக்காக அந்த பணம் கொண்டு செல்லப்பட்டது என்பதையும் சேர்த்து, சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது வழக்கு பதிய வேண்டும். வழக்கு பதியவில்லை எனில், அந்த பணம் யாரிடம் கைப்பற்றப்பட்டதோ, அவரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

