/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளத்தில் மண் எடுக்க வருவாய்த் துறை தடை
/
குளத்தில் மண் எடுக்க வருவாய்த் துறை தடை
ADDED : செப் 07, 2024 02:40 AM
அன்னுார்;விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்வோர், அன்னூர் தாலுகாவில் 28 குளம், குட்டைகளில் இலவசமாக மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதில் அ.மேட்டுப்பாளையத்தில் 50 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.
இங்கு, மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை விட மூன்று மடங்கு ஆழமாக மண் எடுக்கப்படுகிறது. லாரிகள் அசுர வேகத்தில் சென்று மக்களை அச்சுறுத்துகின்றன. புழுதிப்புயல் ஏற்படுத்தி, பாதையை சேதப்படுத்துகின்றன என, அப்பகுதி மக்கள் புகார் கூறி, கடந்த 4ம் தேதி டிப்பர் லாரிகளையும், பொக்லைன் இயந்திரங்களையும் சிறை பிடித்தனர்.
சம்பவ இடத்தில், அன்னுார் வடக்கு வருவாய் ஆய்வாளர் திவ்யா மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். கனிமவளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வுக்கு பின், வருவாய்த்துறையினர் அந்த குளத்தில் மண் எடுக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.