/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை, திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்; மாநிலம் முழுதும் 544 திட்டங்கள் கண்காணிப்பு
/
கோவை, திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்; மாநிலம் முழுதும் 544 திட்டங்கள் கண்காணிப்பு
கோவை, திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்; மாநிலம் முழுதும் 544 திட்டங்கள் கண்காணிப்பு
கோவை, திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்; மாநிலம் முழுதும் 544 திட்டங்கள் கண்காணிப்பு
ADDED : ஏப் 04, 2024 06:32 AM

சென்னை: மாநிலம் முழுதும் குடிநீர் வினியோகத்தை சீராக்குவதற்காக, 544 கூட்டு குடிநீர் திட்டங்களை கண்காணிக்க, தமிழக குடிநீர் வாரியம், கட்டுப்பாட்டு மையத்தை திறந்துள்ளது.
தமிழகத்தில், கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டி தீர்த்தது. மற்ற மாவட்டங்களில், இயல்பை விட குறைவாக மழை பெய்தது.
இதனால், கோவை, திருப்பூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கோடைகாலத்தில் குடிநீர் வினியோகத்தை சீராக்குவதற்கு, தமிழக குடிநீர் வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வாரிய தலைமை அலுவலகத்தில், தலைமை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
வேலுார், தஞ்சாவூர், மதுரை, கோவையில் மண்டல கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நாள்தோறும், குடிநீர் வாரியம் வாயிலாக, 220 கோடி லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இது முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா என்ற விபரத்தை, காலை 8:00 மணிக்குள் சரிபார்த்து, தகவல்களை அனுப்பும்படி, மண்டல தலைமை பொறியாளர்களுக்கு, தமிழக குடிநீர் வாரிய இயக்குனர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, காவிரி, தாமிரபரணி, பவானி, கொள்ளிடம் உள்ளிட்ட, 544 கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இப்பணியில், 300க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்களில், மோட்டார்களை கூடுதல் நேரம் இயக்கி, நிலைமையை சரிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குழாய்களில் உடைப்பு, நீர்க்கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தெரிந்தால், 24 மணி நேரத்திற்குள் நிலைமையை சரி செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், நிலத்தடி நீராதாரம் கைகொடுக்காததால், மாற்று ஏற்பாடுகளையும், தமிழக குடிநீர் வாரிய அதிகாரிகள் செய்து வருகின்றனர். ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கும் வரை, இந்த கட்டுப்பாட்டு மையங்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

