ADDED : மே 31, 2026 08:21 PM
வடவள்ளி: மருதமலை அடிவாரத்தில், சாலையோரத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் குளம் போல கழிவு நீர் தேங்கி இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருக்கிறது.
கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதனால், மருதமலை அடிவாரத்தில் ஏராளமான ஓட்டல்கள், பேக்கரிகள், தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும் உள்ளன.
மருதமலை அடிவாரத்தில் சாலையின் ஒரு புறம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியாகவும், மற்றொருபுறம் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாகவும் உள்ளது.
இப்பகுதியில் மாநகராட்சி சார்பிலும், சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் குடியிருப்புகள் மற்றும் ஓட்டல்கள், பேக்கரிகள், தங்கும் விடுதிகளிலிருந்து கழிவுநீர் அதிகளவு வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த சாக்கடை கழிவுநீர், போலீசார் சோதனை சாவடி அருகே சாலையோரத்தில், சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புறம்போக்கு நிலத்தில் குளம்போல தேங்கி நிற்கிறது.
அதோடு இங்கு,ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளது. இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, அதிக கொசுக்களும் உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே சோமையம்பாளையம் ஊராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து, இப்பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
