/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இன்டெக்-24' கண்காட்சியில் ரோபோக்கள்! துல்லியமான பணி... ஆள்பற்றாக்குறை இல்லை இனி
/
'இன்டெக்-24' கண்காட்சியில் ரோபோக்கள்! துல்லியமான பணி... ஆள்பற்றாக்குறை இல்லை இனி
'இன்டெக்-24' கண்காட்சியில் ரோபோக்கள்! துல்லியமான பணி... ஆள்பற்றாக்குறை இல்லை இனி
'இன்டெக்-24' கண்காட்சியில் ரோபோக்கள்! துல்லியமான பணி... ஆள்பற்றாக்குறை இல்லை இனி
ADDED : ஜூன் 09, 2024 12:34 AM

கோவை;இயந்திரத்துறையில் ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறையை போக்கவும், துல்லியமாக பணிகளை மேற்கொள்ளும் வகையில், பல வகையிலான ரோபோக்கள் மற்றும் லேசர் கட்டிங் இயந்திரங்கள், 'இன்டெக் 2024' கண்காட்சியில், அதிகமாக இடம் பெற்றுள்ளன.
'கொடிசியா' நடத்தும், 20வது 'இன்டெக் 2024' சர்வதேச தொழில் கண்காட்சி, கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள தொழிற்காட்சி வளாகத்தில், 6ம் தேதி துவங்கியது.
கோவையில் உள்ள நிறுவனங்களில் தயாரிக்கப்படும் இயந்திரங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் தயாரிக்கப்படும் இயந்திரங்கள், தளவாடங்கள் மற்றும் சர்வதேச நாடுகளில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களும் இடம் பெற்றிருக்கின்றன. மொத்தம், 495 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மெஷின் டூல் உற்பத்தியாளர்கள் அதிக எண்ணிக்கையில் அரங்குகள் அமைத்திருக்கின்றனர்.
பொதுமக்களுக்கும் அனுமதி உண்டு
வணிக நோக்கத்துக்காக வரும் பார்வையாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் நேரடி செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. தொழில்துறையில் ஆள் பற்றாக்குறை அதிகரித்து வருவதை போக்கவும், துல்லியமான பணிகளை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.
சி.என்.சி., லேசர் கட்டிங் மெஷின்
வாடிக்கையாளர்களுக்கு தேவையான டிசைனை கம்ப்யூட்டரில் தயாரித்து 'செட்' செய்து விட்டால் போதும்; ஆட்டோமேட்டிக்காக, தேவையான வடிவத்தில் பிரேம் ஒர்க் செய்து தர முடியும்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் மட்டுமின்றி, கோவையிலேயே தயாரிக்கப்பட்ட இயந்திரங்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. சிவில் ஒர்க், இன்டீரியர் ஒர்க், மருத்துவம் மற்றும் வேளாண் துறைக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கவும் இவ்வியந்திரத்தை பயன்படுத்த முடியும்.
வெர்ட்டிகல் மில்லிங் மெஷின்
வால்வு மற்றும் பம்ப் டாப் உற்பத்தி செய்வதற்கான வெர்ட்டிகல் மில்லிங் மெஷின் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. 'பேட்டர்ன் மேக்கிங்' பதிவு செய்து விட்டால் போதும்; இரும்பு துண்டுகளை மில்லிங் செய்து, நமக்கு தேவையான டிசைனில் தயாரிப்பு பொருள் கிடைக்கும்.
கவனம் ஈர்க்கும் டெல்டா ரோபோட்
எலக்ட்ரிக்கல் ஆக்டோர்ஸ் என்கிற வகைப்பாட்டில் உள்ள சின்ன சின்ன உதிரி பாகங்களை இணைத்து, டைனமிக் டெல்டா ரோபோட் என்கிற இயந்திரம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. தொழில் நிறுவனத்தின் தேவைக்கேற்ப, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு தேவையான பொருட்களை, அதிவேகமாக எடுத்து வைப்பதற்கு இந்த ரோபோட் உபயோகமாக இருக்கிறது.
லேசர் கட்டிங் மெஷின்
தாய்லாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லேசர் கட்டிங் மெஷின் இடம் பெற்றிருக்கிறது. எம்.எஸ்., - எஸ்.எஸ்., - அலுமினியம், பித்தளையை கட்டிங் செய்து, தேவையான வடிவில் பொருட்களை உற்பத்தி செய்யலாம். விருப்பப்படும் டிசைன் உருவாக்கி, இயந்திரத்தில் 'செட்' செய்து விட்டால் போதும்; தங்கு தடையின்றி பணி நடக்கும்.
மனித தேவையை குறைக்கும் ரோபோ
இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு தொழிலுக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இயந்திரவியல் துறையில் அத்தேவையை பூர்த்தி செய்ய, புதுவகையான 'ரோபோ'க்களை அறிமுகம் செய்திருக்கின்றன.
வெல்டிங் செய்யும்போது, அவற்றை துல்லியமாக அளவீடு செய்ய, ஒவ்வொரு முறையும் பொருளை அருகில் எடுத்து பார்க்க வேண்டும். அவ்வாறு பார்த்து குறியீடு செய்யும்போது, அளவீடு மாறுபட வாய்ப்பு இருக்கிறது.
ரோபோ பயன்படுத்தும்போது, அளவீட்டை துல்லியமாக குறியிட்டு, வெல்டிங் செய்ய முடியும். இதுபோன்ற ரோபோக்கள், தற்போது உருவாக்கியுள்ள மனித சக்தி குறைபாட்டை போக்குவதோடு, வேலையை எளிதாக்குகிறது; குறைந்த நேரத்தில் அதிகமான வேலையை செய்து முடிக்க உதவுகிறது.
100 கிலோ எடையுள்ள பொருட்களையும் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்து வைக்க உதவுகிறது. இதுபோல் எண்ணற்ற இயந்திரங்கள், கண்காட்சி வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இன்றும் (9ம் தேதி), நாளையும் (10ம் தேதி) காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை வணிக பார்வையிடலாம். மாலை, 3:00 மணி முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்; கட்டணம் உண்டு.