/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடெல்லாம் ஆக்கிரமிப்பு; அடிக்கடி விபத்து
/
ரோடெல்லாம் ஆக்கிரமிப்பு; அடிக்கடி விபத்து
ADDED : மே 03, 2024 01:12 AM

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மேட்டுப்பாளையம் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதால், தொடர் விபத்துகள் நடக்கின்றன.
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் தெற்குப்பாளையம் பிரிவில் இருந்து எல்.எம்.டபிள்யூ., பிரிவு வரை, ரோட்டின் இரு பக்கமும் ஏராளமான சாலையோர கடைகள் முளைத்துள்ளன. ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு வெகு அருகே கடைகளை விரித்துள்ளதால், இப்பகுதியில் தினந்தோறும் விபத்துகள் நடந்து வருகின்றன.
ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரம் படைத்த தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ரோட்டில் முளைத்துள்ள கடைகளை கண்டும், காணாமல் செல்கின்றனர்.
போக்குவரத்து காவல்துறையும் இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், அதிகமான விபத்துகளும், உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,' சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் ரோட்டில் பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த விபத்தில் சிக்கி, இரு சக்கர வாகனத்தில் சென்ற கணவன், குழந்தை அதே இடத்தில் உயிரிழந்தனர்.
மனைவி பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். இதுபோல நடந்த பல்வேறு விபத்துகளில் பலர் காயமடைந்து வருகின்றனர்.
குறிப்பாக, எல்.எம்.டபிள்யூ., பிரிவிலிருந்து கேஸ் கம்பெனி நிறுத்தம் வரை பொம்மை, ஸ்கிரீன் துணி, இரவு நேர டிபன் உள்ளிட்ட கடைகளை அகற்றவில்லை என்றால் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல் துறையை கண்டித்து விரைவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்' என்றனர்.