/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.12 கோடி அரசு நிலத்துக்கு வழங்கிய பட்டா ரத்து! சட்ட ரீதியான நடவடிக்கைக்கு போலீசில் தாசில்தார் புகார்
/
ரூ.12 கோடி அரசு நிலத்துக்கு வழங்கிய பட்டா ரத்து! சட்ட ரீதியான நடவடிக்கைக்கு போலீசில் தாசில்தார் புகார்
ரூ.12 கோடி அரசு நிலத்துக்கு வழங்கிய பட்டா ரத்து! சட்ட ரீதியான நடவடிக்கைக்கு போலீசில் தாசில்தார் புகார்
ரூ.12 கோடி அரசு நிலத்துக்கு வழங்கிய பட்டா ரத்து! சட்ட ரீதியான நடவடிக்கைக்கு போலீசில் தாசில்தார் புகார்
ADDED : மே 30, 2024 05:00 AM
'தினமலர்' செய்தி எதிரொலி
கோவை: கோவையில், அரசுக்கு சொந்தமான, ரூ.12 கோடி மதிப்பிலான, 38 சென்ட் பொது ஒதுக்கீடு இடம், தனி நபர்களின் பெயர்களுக்கு, பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டது. நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, பட்டா பெயர் மாற்றம் ரத்து செய்யப்பட்டு, போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை, பீளமேடு தொழிற்கூட பணியாளர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சொசைட்டி சார்பில், 1968ல் பீளமேடு புதுாரில், 7.96 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.
அதில், 104 மனைகள் பிரிக்கப்பட்டு, அரசு மானியம் பெற்று, 96 வீடுகள் கட்டப்பட்டன. மீதமுள்ள இடங்களில் கட்டடங்கள் கட்டுவதற்கு நிதியின்றி, மனையாக விற்கப்பட்டன. இப்பகுதிக்கு, ஆர்.கே., மில் 'பி' காலனி என பெயரிடப்பட்டது.
38 சென்ட் விற்பனை
லே-அவுட் வரைபடத்தை பொதுமக்கள் ஆராய்ந்தபோது, 30 அடி ரோட்டில் 3 மனையிடங்கள், உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் வழி என்பதால், கட்டடம் கட்ட தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்த இடத்தில், 2 மனைகள், பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தில் ஒரு மனை என, 38 சென்ட் இடங்கள் விற்கப்பட்டு இருந்தன.
நில உபயோகத்தை மாற்றாமல், விற்கப்பட்ட அவ்விடங்களை வாங்கியவர்கள், மாநகராட்சியில் கட்டட வரைபட அனுமதி பெறாமல் வீடு கட்டினர்.
அப்பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், 'பொது ஒதுக்கீடு இடத்தை விற்றது; கிரையம் செய்தது செல்லாது. கிரையம் பெற்றவர்களுக்கு, கிரையம் செய்து கொடுத்த கூட்டுறவு வீடு கட்டும் சங்கம், பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்' என கோர்ட் உத்தரவிட்டது.
'தினமலர்' செய்தி எதிரொலி
இச்சூழலில், தற்போதைய சந்தை மதிப்பில் ரூ.12 கோடி மதிப்பிலான, அரசுக்கு சொந்தமான, 38 சென்ட் பொது ஒதுக்கீடு இடத்தை, கோவை தெற்கு தாலுகா அலுவலக, மண்டல துணை தாசில்தார் ஜெயந்தி என்பவர், ஆவணங்களை சரியாக ஆராயாமல், பீளமேடு ஆலைத்தொழிலாளர் வீடு கட்டும் சங்கத்தின் பெயரில் பட்டா இருந்ததாக கூறி, தனி நபர்கள் முத்தம்மாள், சுதா, செல்வி, ரேணு உள்ளிட்ட, 10 நபர்களுக்கு பெயர் மாற்றம் செய்து சான்று வழங்கியுள்ளார்.
தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தை, தனி நபர்களுக்கு வருவாய்த்துறையினர் துணிச்சலாக தாரை வார்த்துக் கொடுத்தது தொடர்பாக, நமது நாளிதழ் கோவை நகர் சப்ளிமென்ட்டில், 'சித்ரா - மித்ரா' பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதுதொடர்பாக விசாரித்து, நிலத்தை மீட்க, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில், விசாரணை நடந்தது.
தெற்கு கோட்டாட்சியர் பண்டரிநாதன், தெற்கு தாசில்தார் சரவணன் உள்ளிட்டோர், வருவாய்த்துறை ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு நகல் பெறப்பட்டது. பட்டா பெயர் மாறுதலுக்கு சமர்ப்பித்த விண்ணப்பங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
தெற்கு தாலுகாவுக்கு சம்பந்தமில்லாத வடக்கு தாலுகா சர்வேயர் மற்றும் ஆறு மாதத்துக்கு முன் திண்டுக்கல்லுக்கு இட மாறுதலாகிச் சென்ற 'டிராப்ட்ஸ்மேன்' ஆகியோரது பெயரில், கம்ப்யூட்டரில் மின்னணு முறையில் 'லாக்இன்' செய்து, பட்டா பெயர் மாறுதல் செய்வதற்கான கோப்புகள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
பட்டா பெயர் மாற்றம் செய்ய, தெற்கு தாலுகா அலுவலகத்தில் முறைகேடு செய்திருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அரசு நிலத்தை தனி நபர்களுக்கு பெயர் மாற்றம் செய்து வழங்கப்பட்டிருந்த பட்டா ரத்து செய்யப்படுவதாக, கோட்டாட்சியர் பண்டரிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு நகல், ஐகோர்ட் பார்வைக்கு அனுப்பப்படுகிறது.
மேலும், அரசுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் சமர்ப்பித்து அபகரிக்க முயற்சித்தது; வருவாய்த்துறை ஆவணங்களை முறையாக ஆராயாமல் பட்டா வழங்கியது தொடர்பாக விசாரித்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில், தெற்கு தாசில்தார் சரவணன் புகார் கொடுத்துள்ளார்.
உண்மையாக விசாரணை நடக்கும் பட்சத்தில், அரசு நிலத்துக்கு பட்டா வாங்கியவர்கள் மற்றும் பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுத்த அதிகாரிகள் பலரும் சிக்குவார்கள்.
இவ்விவகாரத்தில், லஞ்சமாக எவ்வளவு தொகை கைமாறியது என்பதும் வெளிச்சத்துக்கு வரும்.