ADDED : மார் 24, 2024 11:44 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் நால் ரோடு அருகே நேற்று முன் தினம் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவை சேர்ந்த அரவிந்தன் என்பவரின் காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1 லட்சத்து 600 பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அதே போல் நேற்று, சிறுமுகை அருகே கணேசபுரம் பகுதியில் நடைபெற்ற சோதனையில் ரூ.73 ஆயிரத்து 650 மற்றும் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் தனியார் தீம் பார்க் அருகில் நடைபெற்ற சோதனையில் ரூ.51 ஆயிரம் பணம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அவை பின்னர் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில், ஒப்படைக்கப்பட்டது.
கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் நால்ரோட்டில் பறக்கும் படை அதிகாரி ராஜேஸ்வரி தலைமையிலான குழுவினர், நேற்று காலை, 9:-00 மணிக்கு, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.
வேனில் வந்த காந்தலூரை சேர்ந்த சுபாஸ் சந்திரபோஸ் என்பவரிடம் இருந்து, உரிய ஆவணங்கள் இல்லாத, 1 லட்சத்து, 3 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் வாயிலாக மொத்தம் ரூ. 3 லட்சத்து 28 ஆயிரத்து 250 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

