/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இன்று வேலை நிறுத்தம்
/
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இன்று வேலை நிறுத்தம்
ADDED : மார் 12, 2025 11:15 PM
அன்னுார்; 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துராஜ், செயலாளர் விஜயகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை :
கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க., அரசு, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றவில்லை. எனவே, வருகிற 13ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பல ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். 100 நாள் திட்ட கணினி உதவியாளர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரை பணி வரன்முறை படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திற்கு, தனி ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
கனவு இல்லம் மற்றும் வீடு பழுது பார்க்கும் திட்டத்திற்கு உரிய பணியிடம் ஏற்படுத்த வேண்டும். பதவி உயர்வு வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தம் மாநில அளவில் நடைபெறுகிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.