/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சிறைக்கோழிகள்' விற்பனையில் 'துாள்'
/
'சிறைக்கோழிகள்' விற்பனையில் 'துாள்'
ADDED : பிப் 23, 2025 02:52 AM

சிறையில் உள்ள பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளை விற்பனை செய்ய, காந்திபுரம் அருகில் 'பிரீடம் சிக்கன்' கடை செயல்படுகிறது.
கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பயிற்சிகள், வேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கைதிகளுக்கு தையல், தோட்ட பராமரிப்பு, பிராய்லர் கோழி வளர்ப்பு, சிறை தொழிற்சாலை பணிகள் உள்ளிட்டவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, பணியிலும் அமர்த்தப்படுகின்றனர்.
இதில், காந்திபுரம் பகுதியில் இரண்டு பெட்ரோல் 'பங்க்', சிறை பஜார், உள்ளிட்டவை சிறை கைதிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சிறையில் உள்ள பண்ணையில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை, விற்பனை செய்வதற்காக தற்போது, காந்திபுரம் பகுதியில் பிரீடம் சிக்கன் கடை என்ற பெயரில், சிறை கைதிகளால் நிர்வகிக்கப்படும் இறைச்சி கடை திறக்கப்பட்டுள்ளது.
சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவை மத்திய சிறையில் மொத்தம் ஐந்து பண்ணைகள் உள்ளன. அதில் சுமார் ஐந்தாயிரம் பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதில், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறை கைதிகளுக்கு, கோழிக்கறி சமைத்து வழங்கப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கும் சேர்ந்து சுமார், 700 கிலோ இறைச்சி தேவைப்படுகிறது. தற்போது, பிரீடம் கடையில் வார நாட்களில் சுமார் 35 கிலோவும், வார இறுதி நாட்களில் 70 கிலோ இறைச்சியும் விற்பனையாகிறது.
ஒரு கிலோ இறைச்சி ரூ. 200க்கும், உயிருடன் ஒரு கிலோ ரூ.130க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சிறை கைதிகளுக்கும், கடைக்கும் போக மீதமுள்ள கோழிகள் கோபி, சத்தியமங்கலம், ஈரோடு போன்ற சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிரீடம் சிக்கன் கடையில் இருந்து ரூ. 80 ஆயிரம் வருமானம் கிடைத்துள்ளது,'' என்றார்.