ADDED : ஆக 10, 2026 08:11 PM
கோவை: கோவை–மேட்டுப்பாளையம் இடையே சாதாரண பெட்டிகளுடன் இயக்கப்பட்ட பயணிகள் ரயில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, 12 பெட்டிகள் கொண்ட மெமு ரயிலாக மாற்றுமாறு தொடர் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நேற்று முதல் 12 பெட்டிகள் கொண்ட மெமு ரயில் கோவை–மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படுகிறது.
போத்தனுார் ரயில் பயனாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியன் கூறியதாவது:
கோவையில் ஏற்கனவே மெமு ரயில் பெட்டிகளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த காலங்களில் கோவையில் இருந்து சேலத்துக்கும், திண்டுக்கல் வரையும் மெமு ரயில்கள் இயக்கப்பட்டன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அச்சேவைகள் நிறுத்தப்பட்டன. மேட்டுப்பாளையம் ‘மெமு’ ரயிலுக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 8 பெட்டிகளை சென்னைக்கு திருப்பி அனுப்பாமல், கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழநி வழியாக திண்டுக்கல் அல்லது சேலத்துக்கு புதிய மெமு ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டத்திடம் முறையிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
