/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை சாலையில் மணல்மேடு அடிக்கடி விபத்து அபாயம்
/
காரமடை சாலையில் மணல்மேடு அடிக்கடி விபத்து அபாயம்
ADDED : ஜூன் 03, 2024 11:19 PM

மேட்டுப்பாளையம்;காரமடை சாலையில் உள்ள மணல் மேட்டால், அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு, பொது மக்கள் காயம் அடைந்து வருகின்றனர்.
காரமடையில் இருந்து, மேட்டுப்பாளையத்தில் நகராட்சி எல்லை வரை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சாலையின் மையப் பகுதியில் டிவைடர் வைக்கப்பட்டுள்ளது.
அதனால் ஒவ்வொரு வழியிலும், ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் செல்லும் அளவிற்கு, சாலைகள் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏதும் ஏற்படுவதில்லை.
கடந்த வாரம் பெய்த கன மழையால், காரமடையில் இருந்து, மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, 100 அடி தூரத்துக்கு மண் மற்றும் மணல் மேடு ஏற்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக இரு சக்கர வாகனங்களில் இரவில் வருபவர்கள், மணல் பாதையில் வாகனத்தை ஓட்டும் பொழுது, சறுக்கி கீழே விழுந்து, விபத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் வாகனத்தில் உடன் வருபவர்கள் காயம் அடைகின்றனர்.
இதுகுறித்து இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கூறியதாவது: ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் பொழுது, இந்த இடத்தில் இது மாதிரி மணல் தேங்குவதால், சாலையில் நீண்ட தூரத்திற்கு மணல் மேடாகவே உள்ளது. இரவில் இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், மணலில் சறுக்கி விபத்துக்கு உள்ளாகின்றனர். பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு, உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக, தற்போது சாலையில் உள்ள மணலை, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வாகன ஓட்டுனர்கள் கூறினர்.