/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கனுார் பள்ளம்: சாக்கடை வெள்ளம்! குப்பை, கழிவுநீர், ஆக்கிரமிப்புகளின் சங்கமம்... மீட்பதற்கு சிறப்புத் திட்டம், நிதி அவசியம்!
/
சங்கனுார் பள்ளம்: சாக்கடை வெள்ளம்! குப்பை, கழிவுநீர், ஆக்கிரமிப்புகளின் சங்கமம்... மீட்பதற்கு சிறப்புத் திட்டம், நிதி அவசியம்!
சங்கனுார் பள்ளம்: சாக்கடை வெள்ளம்! குப்பை, கழிவுநீர், ஆக்கிரமிப்புகளின் சங்கமம்... மீட்பதற்கு சிறப்புத் திட்டம், நிதி அவசியம்!
சங்கனுார் பள்ளம்: சாக்கடை வெள்ளம்! குப்பை, கழிவுநீர், ஆக்கிரமிப்புகளின் சங்கமம்... மீட்பதற்கு சிறப்புத் திட்டம், நிதி அவசியம்!
ADDED : மே 09, 2024 04:23 AM

கோவை நகருக்குள் பாயும் சங்கனுார் ஓடையிலுள்ள திடக்கழிவுகளை அகற்றி, கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, முழுமையாகச் சீரமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நொய்யல் ஆற்றுக்கான நீர் ஆதாரங்களில், சங்கனுார் பள்ளம் என்று அழைக்கப்படும் ஓடையும் முக்கியமானதாகும். கோவை அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், தடாகம் பள்ளத்தாக்கில் பல்வேறு நீரோடைகள் சேர்ந்து உருவாகும் சங்கனுார் பள்ளம் (ஓடை), சிங்காநல்லுார் வரை 16.6 கி.மீ., துாரம் பயணித்து, அதன்பின் வெள்ளலுார் அணைக்கட்டு பகுதியில், நொய்யலில் கலக்கிறது.
ஆனால் இப்போது ஆக்கிரமிப்புகளால் அடைபட்டு, குப்பைகள் குவிக்கப்பட்டு, நகரின் பெருமளவு கழிவுநீரும் கலக்கப்பட்டு, இந்த ஓடைக்கு ஒட்டு மொத்தமாய் பாடை கட்டப்பட்டுள்ளது. நொய்யலில் நேரடியாகக் கலக்கும் கழிவுநீர், சாயக்கழிவு ஆகியவற்றுடன், அதை மேலும் பாழ்படுத்தும் முக்கியக் காரணியாக சங்கனுார் பள்ளம் உருமாறியுள்ளது.
இருப்பினும், பருவமழை தீவிரமாகும்போது, இப்போதும் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து இந்த ஓடைக்கு ஏராளமான மழை வெள்ளம் வருகிறது. கடந்த ஆண்டில் வடகிழக்குப்பருவமழைக் காலத்தில், பல ஆண்டுகளுக்குப் பின், இந்த ஓடையில் பாய்ந்தோடிய வெள்ளம், சின்னவேடம்பட்டி குளம் உட்பட பல குளங்கள் நிரம்புவதற்கு பெரிதும் உதவியது.
இந்த ஓடை, தடாகம் பகுதியில் அதற்கான இயற்கை நிறத்துடன் பாயத்துவங்குகிறது. நகருக்குள் நுழையும் முன், செம்மண் பூமியைக் கடப்பதால், சிகப்பு நிறத்துக்கு மாறுகிறது. அதன்பின், நகரைக் கடக்கும்போது, பல ஆயிரம் குழாய்களிலும், கால்வாய்களிலும் இருந்து கழிவுநீர் இந்த பள்ளத்தில் பாய்கிறது. அதனால், கருப்பு நிறமாகிறது; இறுதியில் நொய்யலில் பெரும் குப்பைகளுடன் சங்கமமாகிறது.
கோவையில் நீர் நிலைகளை மீட்பதற்காக பல்வேறு சூழல் அமைப்புகளும் போராடி வருகின்றன. இதன் பலனாக, நொய்யல் நதியைச் சீரமைக்க, 'நடந்தாய் வாழி காவேரி' திட்டத்தில், மத்திய அரசின் நிதி ரூ.900 கோடியும், மாநில அரசின் நிதியாக ரூ.300 கோடியும் சேர்த்து ரூ.1200 கோடி மதிப்பில், திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 160 கி.மீ., துாரமுள்ள நொய்யல் நதி சீரமைக்கப்படவுள்ளது. அதற்கும் முன்பாக, வெறும் 16.6 கி.மீ., துாரமேயுள்ள அதிலும் பெரும் பகுதி கோவை நகருக்குள் அமைந்துள்ள இந்த சங்கனுார் ஓடையை மீட்பதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுக்கத் துவங்கியுள்ளது.தற்போது, மேட்டுப்பாளையம் ரோட்டிலிருந்து சத்தி ரோடு வரை, 2300 மீட்டர் துாரத்துக்கு, ரூ.49 கோடி மதிப்பில் இந்த ஓடையைச் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓடையை துார் வாரி, தரை தளத்தில் கருங்கற்கள் பதித்து, இரு புறமும் கான்கிரீட் தடுப்புச் சுவர் மற்றும் கரையில் நடைபாதையுடன் கூடிய ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதனால் முழுமையான பலனில்லை; இரு புறமும் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி, துார் வாரி, கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
அதற்கு தமிழக அரசும், மாநகராட்சியும் இணைந்து, சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும்; அரசு நிதி கிடைக்காவிடில், நகரிலுள்ள நிறுவனங்களின் 'சிஎஸ்ஆர்' நிதியைக் கூட பயன்படுத்தலாம். இதையே செய்ய முடியா விட்டால், எத்தனை கோடி செலவழித்தாலும் நொய்யலை மீட்பதும் கானல் நீராகத்தான் முடியும்!
-நமது நிருபர்-