/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையோர வியாபாரிகளிடம் நேரில் 'ஐ.டி., கார்டு' வழங்க திட்டம்
/
சாலையோர வியாபாரிகளிடம் நேரில் 'ஐ.டி., கார்டு' வழங்க திட்டம்
சாலையோர வியாபாரிகளிடம் நேரில் 'ஐ.டி., கார்டு' வழங்க திட்டம்
சாலையோர வியாபாரிகளிடம் நேரில் 'ஐ.டி., கார்டு' வழங்க திட்டம்
ADDED : ஜூன் 07, 2024 01:20 AM
கோவை;சாலையோர வியாபாரிகள் குழு அமைப்பதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் விதமாக இதுவரை அடையாள அட்டை பெறாத வியாபாரிகளுக்கு நேரில் வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில், 2019-20ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 23 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் இருந்தனர். இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் வங்கிக்கடன், தள்ளுவண்டி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
தற்போது, பிரதம மந்திரியின் 'ஆத்ம நிர்பார்' திட்டத்தில் பதிவு செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை வழங்கப்படுகின்றன. இதற்கென, கடந்தாண்டு சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
மாநகராட்சி பணியாளர்கள் வியாபாரிகளை நேரில் சந்தித்து ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட விபரங்களை சேகரித்து, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இணைய முகப்பில் பதிவு செய்தனர். கள ஆய்வில், 14 ஆயிரத்து, 400 சாலையோர வியாபாரிகள் இருப்பது தெரியவந்தது.
பதிவு செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கடந்த மார்ச் முதல் அடையாள அட்டையும், வியாபார சான்றிதழும் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டையை காண்பித்து இதுவரை, 8,100 பேர் மட்டுமே அடையாள அட்டை பெற்றுள்ளனர்.
எஸ்.எம்.எஸ்., வாயிலாக நினைவூட்டியும் இன்னும், 6,000க்கும் மேற்பட்டோர் அடையாள அட்டை பெறாது அலட்சியமுடன் இருக்கின்றனர். அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே இனி வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.
மேலும், மாநகராட்சி கமிஷனர் தலைமையில், போலீஸ், வருவாய் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் அடங்கிய, 21 பேர் கொண்ட சாலையோர வியாபாரிகள் குழு அமைக்கப்படவுள்ளது. இக்குழுவில் வியாபாரிகள் தேர்வு செய்யும் ஆறு பிரதிநிதிகளும் இடம்பெறுவர்.
ஆனால், இரு மாதங்களுக்கு மேலாகியும் அடையாள அட்டை இன்னும் வியாபாரிகள் அனைவரும் பெறாமல் உள்ளதால் வியாபாரிகள் குழு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாநகராட்சி பணியாளர்கள் நேரில் சென்று, வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கவுள்ளனர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'வியாபாரிகள் குழு அமைக்கப்பட்ட பின்னரே வியாபாரிகளுக்கென்று தனி விற்பனை மையம் அமைக்க முடியும். இப்பணிகளை வேகப்படுத்தும் விதமாக அடையாள அட்டையை வியாபாரிகளிடம் நேரில் வழங்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

