/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை
/
மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை
ADDED : ஜூலை 01, 2024 01:29 AM

கோவை;'ஆட்டிடியூட்' அமைப்பு சார்பில், ஏழ்மை நிலையில் உள்ள 150 கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, இடையர்பாளையத்தில் உள்ள ஜேசி பள்ளியில் நேற்று நடந்தது.
'விருக் ஷா - 2024 கல்வியால், அடுத்த தலைமுறையை ஆளுமையாக்குதல்' என்ற பெயரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கொடையாளர்கள் சண்முகசுந்தரம், ரமா நாராயணன், விஷ்ணுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், பட்டிமன்றப் பேச்சாளர் பாரதிபாஸ்கர் பேசுகையில், மாணவர்கள் நன்றாகப் படிப்பதுடன், பெற்றோரை பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொள்ள வேண்டும். இன்றைய சமூக சூழலில், கவனச் சிதறலுக்கு அதிக வாய்ப்புள்ளது. அதற்கு ஆட்படாமல் தங்களது குறிக்கோளை நோக்கி, மாணவர்கள் செல்ல வேண்டும். எதிர்காலத்தில் நல்ல நிலைக்குச் சென்று, ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவ வேண்டும், என்றார்.
தொடர்ந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய, கல்விக் கட்டணம் செலுத்த இயலாத 150 கல்லூரி மாணவர்களுக்கு, ரூ.15 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், ஆட்டிடியூட் டிரஸ்ட் தலைவர் வெங்கடபிரசன்ன குமார், செயலர் பிரகாஷ், பொருளாளர் ஜெயபிரகாஷ், திட்ட இயக்குனர் சுப்பிர மணியன், மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.