/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மேலாண்மைக்குழு புதுப்பித்தல் பணி துவக்கம்
/
பள்ளி மேலாண்மைக்குழு புதுப்பித்தல் பணி துவக்கம்
ADDED : ஜூலை 03, 2024 09:29 PM
உடுமலை : அரசுப்பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழுக்களை சீரமைத்து, புதிய குழுக்கள் துவங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில், பள்ளியின் கட்டமைப்பு உட்பட பல்வேறு சிறப்புகளை பெற்றோருக்கு தெரியப்படுத்துவதற்கும், மாணவர்களின் கற்றல் திறன்களை பெற்றோர் அறிந்து கொள்வதற்கும், பள்ளி தொடர்பான தகவல் பரிமாற்றம், பள்ளிகளின் வளர்ச்சியில் பெற்றோருக்கும் பங்கு இருப்பதை உறுதி செய்வதற்கும், பள்ளி மேலாண்மைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.
இந்த குழுக்களில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஒவ்வொரு மாதமும், இக்குழுவிற்கான சிறப்புக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதில் பள்ளியில் அந்த மாதத்தில் செய்ய கட்டமைப்பு பணிகள், பள்ளிக்கான நிதிஒதுக்கீடு, அரசின் நலத்திட்டங்கள் குறித்து, ஆசிரியர்கள் பெற்றோருக்கு விளக்கமளிக்க வேண்டும்.
மேலும் இக்கூட்டத்தின் வாயிலாக, பல்வேறு விழிப்புணர்வுகளும் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் வகுப்புகளை முடித்து பள்ளியை விட்டு வெளியேறுவது அல்லது வேறு அரசு பள்ளிக்கு செல்வது போன்ற காரணங்களால், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மாற்றப்பட்டு, புதிய குழுக்கள் உருவாக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், 2025 - 26ல் அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழுக்களை புதுப்பிக்க, கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உடுமலை கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளில், மேலாண்மைக் குழுக்களை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.