/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவியல் பொதுத்தேர்வு685 பேர் ஆப்சன்ட்
/
அறிவியல் பொதுத்தேர்வு685 பேர் ஆப்சன்ட்
ADDED : ஏப் 05, 2024 12:27 AM
கோவை;கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் தேர்வை 40 ஆயிரத்து 383 பேர் எழுதினர். 685 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது. 158 மையங்களில் அறிவியல் தேர்வு நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வானது 1.15 மணிக்கு நிறைவடைந்தது. இத்தேர்வை 40 ஆயிரத்து 383 மாணவர்கள் எழுதியுள்ளனர். 685 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட 2,860 அலுவலர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.
இத்தேர்வில், 2 மதிப்பெண் கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும், நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் மாணவ, மாணவிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அறிவியல் ஆசிரியர்கள் கூறுகையில், 'தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. 2 மதிப்பெண்கள் பிரிவில் முக்கியமானவை என குறிப்பிடப்படும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
4 மற்றும் 7 மதிப்பெண் கேள்விகள் சில மாணவர்கள் ஆழ்ந்து படித்து சிந்தித்து எழுதக் கூடியதாக இருந்ததால் மாணவர்களுக்கு சற்று சவாலாக இருந்திருக்கும். இருப்பினும், மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறக்கூடிய வாய்ப்புள்ளது. ஆனால், சென்டம் அடிக்கும் வாய்ப்பு இத்தேர்வில் குறைவுதான்' என்றனர்.

