/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சதமடிக்கும் வெப்பம்: ஆய்வு மையம் 'அலர்ட்'
/
சதமடிக்கும் வெப்பம்: ஆய்வு மையம் 'அலர்ட்'
ADDED : ஏப் 03, 2024 10:46 PM
பொள்ளாச்சி : கோவை மாவட்டத்தில், பகல், இரவு நேர வெப்பநிலை சராசரியை விட, 1-2 சதவீதம் கூடுதலாக உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை வரும் ஐந்து நாட்களில், 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.
அதாவது, 102 டிகிரி வெப்பம் நிலவும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
அதன்படி, ஒரு சில இடங்களில் லேசான துாறல் மழை எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
காலை நேர காற்றின் ஈரப்பதம்,80 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம்,20 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு, 10-12 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
நிலவும் வறண்ட வானிலையை கருத்தில் கொண்டு, ஏப்., முதல் வாரத்தில் இறவை கம்பு விதைப்புக்காக நிலத்தை தயார் செய்ய வேண்டும். பகல், இரவு வெப்பநிலை உயர்ந்து வருவதாலும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் குறைந்து காணப்படுவதாலும், மதியம்,2:00 -3:00 வரை உள்ளூர் பகுதிகளில் சுழற்காற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, ஐந்து மாத வயதுடைய வாழை மரங்களுக்கு முட்டு கொடுக்கவேண்டும். கடந்த ஐந்து நாட்களில், கோவையில்,38 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீர்ப்பாசனம் செய்யும் விவசாயிகள், பகல் நேரத்தை தவிர்த்து, காலை, மாலை வேளையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வெயில் அதிகம் இருக்கும் நேரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும், என, ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

